விழுப்புரம்: மரக்காணம் அருகே கால்கள் செயலிழந்த நிலையில், வீல் சேரின் உதவியுடன் பள்ளிக்குச் சென்று வந்த 15 வயது மாற்றுத்திறனாளி மாணவிக்கு பேட்டரி வாகனம் வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், மாணவியின் நிலை குறித்து ABP நாடு செய்தியாக வெளியிட்டதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து பேட்டரி வாகனம் வாங்கி வழங்கினர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இன்று மாணவிக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த முன்னூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சீனிவாசன் - புஷ்பா தம்பதியினரின் மூத்த மகள் யாசினி (15). இவர் முன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

கல்வியில் கெட்டிக்காரி... கால்களில் சக்தியில்லை! பேட்டரி வாகனம் கேட்டு போராடும் ஏழை மாணவி

சிறு வயது முதலே கால்களில் பாதிப்பு

யாசினி சிறு வயது முதலே கால்களில் பாதிப்பு காரணமாக சிரமத்துடன் நடந்து வந்துள்ளார். இருப்பினும், தனது உடல்நிலையை பொருட்படுத்தாமல் கல்வியில் ஆர்வம் காட்டி பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். 6-ம் வகுப்பு வரை ஓரளவுக்கு தட்டுத்தடுமாறி நடந்து பள்ளிக்குச் சென்ற அவர், 7-ம் வகுப்புக்குப் பிறகு கால்களின் செயல்பாடு படிப்படியாக குறைந்ததாக கூறப்படுகிறது. பின்னர், முழுமையாக நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மகளின் உடல்நிலையை சரிசெய்ய பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த போதிலும், இதுவரை அவர் மீண்டும் நடக்கக்கூடிய நிலை ஏற்படவில்லை.

வீல் சேர் மட்டுமே கிடைத்ததால் சிரமம்

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சீனிவாசன் - புஷ்பா தம்பதியினர் இருவரும் தினக்கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். மாணவி யாசினிக்கு பேட்டரி வாகனம் வழங்க வேண்டும் என கடந்த 4 ஆண்டுகளாக பெற்றோர் பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திலும் பதிவு செய்திருந்தனர். எனினும், பேட்டரி வாகனத்துக்குப் பதிலாக வீல் சேர் மட்டுமே கிடைத்ததாக பெற்றோர் தெரிவித்தனர். இதனால், யாசினியை தினமும் யாராவது ஒருவர் வீல் சேரில் அமர வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரவும் வேண்டிய நிலை ஏற்பட்டது.

பெற்றோர் வேலைக்குச் சென்றால் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை

பெற்றோர் இருவரும் தினக்கூலி வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், சில நேரங்களில் யாசினியை பள்ளிக்கு அழைத்துச் செல்லவும், மாலையில் வீட்டிற்கு அழைத்து வரவும் ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. கல்வியில் ஆர்வம் இருந்தும் போக்குவரத்து வசதி இல்லாததால் பள்ளிக்கு தொடர்ந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதற்கிடையே, மாணவியின் நிலையை அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளனர். பெற்றோர் அழைத்துச் செல்ல முடியாத நாட்களில் ஆசிரியர்களே வாகனத்தில் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரை பள்ளிக்கு அழைத்து வந்ததுடன், பள்ளி முடிந்ததும் மீண்டும் வீட்டில் கொண்டு சேர்த்து வந்ததாக பெற்றோர் தெரிவித்திருந்தனர்.

மாணவியின் கையெழுத்தை பாராட்டிய ஆசிரியர்கள்

யாசினி படிப்பில் ஆர்வமும் திறமையும் கொண்டவர் என்றும், குறிப்பாக அவரது கையெழுத்தை ஆசிரியர்கள் பலமுறை பாராட்டி பரிசுகள் வழங்கியுள்ளதாகவும் அவரது தாய் புஷ்பா தெரிவித்திருந்தார்.

தனது உடல்நிலையைத் தாண்டி கல்வியில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் மாணவி பள்ளிக்குச் சென்று வந்த நிலையில், அவருக்கு பேட்டரி வாகனம் வழங்கினால் மற்றவர்களின் உதவியின்றி பள்ளிக்குச் சென்று வர முடியும் என பெற்றோர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

செய்தி எதிரொலியாக தவெக நிர்வாகிகள் உதவி

மாணவி யாசினியின் நிலை குறித்து ஏபிபி நாடு செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி அப்பகுதியில் கவனத்தை ஈர்த்த நிலையில், மாணவியின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என கருதிய தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அப்பகுதி நிர்வாகிகள் ஒன்றிணைந்தனர்.

இதையடுத்து, தவெக நிர்வாகிகள் தங்களது சொந்த முயற்சியில் பேட்டரி வாகனத்தை வாங்கி மாணவி யாசினிக்கு வழங்கினர். இதனால், நீண்ட நாட்களாக பேட்டரி வாகனத்துக்காக காத்திருந்த மாணவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உடனடி நிவாரணம் கிடைத்தது.

மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பேட்டரி வாகனம்

இதற்கிடையே, மாணவி யாசினியின் கோரிக்கையை பரிசீலித்த மாவட்ட நிர்வாகம் சார்பிலும் இன்று அவருக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூகநீதி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அமைச்சர் வன்னியரசு கலந்து கொண்டு மாணவி யாசினிக்கு பேட்டரி வாகனத்தை வழங்கினார். பேட்டரி வாகனத்தை பெற்றுக்கொண்ட மாணவி மற்றும் அவரது பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நீண்ட காலமாக பேட்டரி வாகனம் கேட்டு போராடி வந்த நிலையில், ஒரே நாளில் தனியார் முயற்சியிலும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் உதவி கிடைத்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்துள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

மேல்படிப்புக்கு உதவும்

முன்னூர் கிராமத்தில் தற்போது 10-ம் வகுப்பு வரை மட்டுமே பள்ளி உள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். 10-ம் வகுப்புக்குப் பிறகு மேல்படிப்பைத் தொடர பிரம்மதேசம், வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், பேட்டரி வாகனம் கிடைத்திருப்பது தற்போது பள்ளிக்குச் செல்வதற்கு மட்டுமின்றி, எதிர்காலத்தில் மேல்படிப்பைத் தொடரவும் பெரிதும் உதவியாக இருக்கும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

“மற்றவர்களை எதிர்பார்க்காமல் பள்ளிக்குச் செல்ல முடியும்”

மாணவியின் தாய் புஷ்பா கூறுகையில், “என் மகள் சிறு வயதில் இருந்தே கஷ்டப்பட்டுத்தான் நடந்து வந்தாள். தற்போது முழுமையாக நடக்க முடியாத நிலையில் வீல் சேரில் இருக்கிறாள். கடந்த 4 ஆண்டுகளாக பேட்டரி வாகனம் கேட்டு தொடர்ந்து மனு அளித்து வந்தோம்.

எங்கள் குடும்பம் மிகவும் ஏழ்மையானது. நாங்கள் இருவரும் கூலி வேலைக்குச் சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும். இதனால், மகளை தினமும் பள்ளிக்கு அழைத்துச் செல்வதும், மீண்டும் அழைத்து வருவதும் சிரமமாக இருந்தது.

என் மகள் படிப்பில் மிகவும் ஆர்வமாக இருப்பாள். ஆசிரியர்களும் அவளை தொடர்ந்து ஊக்கப்படுத்தி உதவி செய்து வருகின்றனர். தற்போது பேட்டரி வாகனம் கிடைத்திருப்பதால், அவளால் மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காமல் பள்ளிக்குச் சென்று வர முடியும். மேல்படிப்புக்கும் இது உதவியாக இருக்கும்” என தெரிவித்தார்.

மாணவி யாசினிக்கு பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளதால், அவரது கல்விப் பயணத்தில் ஏற்பட்டிருந்த முக்கிய தடையாக இருந்த போக்குவரத்து சிரமம் நீங்கியுள்ளதாக பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article