புதுச்சேரி: “என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரி கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமாக 4 கொலைகள் நடக்கின்றன” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், திமுக வேட்பாளர் சேது செல்வத்துக்கு ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:

தமிழகத்தைப் போலவே புதுச்சேரி மக்களின் வளம் மற்றும் நலனுக்காக திமுக தொடர்ந்து பங்காற்றி வருகிறது. புதுச்சேரியில் கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் மூலம் ஆபத்து ஏற்பட்டபோது, மாநில மக்களின் உரிமைகளுக்காக திமுக போராடியது. திமுக ஆட்சி நடைபெற்ற காலங்களில் பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

தாலிக்கு தங்கம் திட்டம், சத்துணவில் முட்டை வழங்கும் திட்டம், லாஸ்பேட்டை உழவர் சந்தை உள்ளிட்டவை திமுக ஆட்சியின் சாதனைகள். இவற்றை மனதில் வைத்து தட்டாஞ்சாவடி தொகுதி மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

ரங்கசாமி மீது ஸ்டாலின் விமர்சனம்

இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல். முதல்வர் ரங்கசாமி கடந்த பொதுத்தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்படி ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதால், தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் கைவிட்டார்.

அவரை நம்பி வாக்களித்த மக்களை கைவிட்ட ரங்கசாமியை, இந்த தேர்தலில் தட்டாஞ்சாவடி மக்கள் கைவிட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

மேலும், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்த ஸ்டாலின், மறுபுறம் காங்கிரஸ் வேட்பாளரும் களத்தில் உள்ளதாக குறிப்பிட்டார்.

‘திமுக வேட்பாளர் நேர்மையானவர்’

“என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர் என்றால், காங்கிரஸ் வேட்பாளர் சாராய சாம்ராஜ்ஜியத்துக்கு சொந்தக்காரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திமுக வேட்பாளர் சேது செல்வம் நேர்மையான பின்புலம் கொண்டவர்.

தொழிலாளர்களுக்காக போராடி சிறை சென்றவர். அவரை தேர்வு செய்தால் மக்களுக்காக உண்மையாக உழைப்பார்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் எம்எல்ஏ அலுவலகம் கூட இல்லை என்றும், இலவச வீட்டுமனை பட்டா, தொழிற்பேட்டைகளில் புதிய தொழிற்சாலைகள், மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

‘புதுச்சேரி கொலைச்சேரியாக மாறிவிட்டது’

என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியின் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாக குற்றம்சாட்டிய ஸ்டாலின், “புதுச்சேரி இப்போது கொலைச்சேரியாக மாறிவிட்டது. ஒரு வாரத்துக்கு சர்வசாதாரணமாக 4 கொலைகள் நடக்கின்றன. பட்டப்பகலில், நண்பகலில், மாலையில், நள்ளிரவில் என அடுக்கடுக்காக கொலைகள் நடக்கின்றன” என விமர்சித்தார்.

மேலும், “முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் என்ன செய்கிறார்கள்? குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லக்கூட வாய் திறக்காத ஆட்சி நடக்கிறது” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

‘இரட்டை இன்ஜின் ஆட்சியில் ஒரு இன்ஜினும் வேலை செய்யவில்லை’

இரட்டை இன்ஜின் ஆட்சி இருந்தால் நல்லாட்சி நடைபெறும் என கூறப்பட்ட நிலையில், புதுச்சேரியில் ஒரு இன்ஜினும் வேலை செய்யவில்லை என ஸ்டாலின் விமர்சித்தார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, நிர்வாக சீர்குலைவு உள்ளிட்டவற்றால் புதுச்சேரி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை தட்டிக்கேட்க திமுக வேட்பாளர் சேது செல்வம் வெற்றி பெற வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மாநில அந்தஸ்து விவகாரத்திலும் கேள்வி

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ரங்கசாமி பிரச்சினை வரும்போதெல்லாம் கையில் எடுப்பதாக ஸ்டாலின் விமர்சித்தார்.

“சட்டப்பேரவையில் தீர்மானம் போடும் ரங்கசாமி, அதிகாரிகள் தடுக்கின்றனர் என கூப்பாடு போடும் ரங்கசாமி, எம்எல்ஏக்களை டெல்லிக்கு அழைத்துச் சென்று போராடலாமே? ஏன் செய்யவில்லை? மத்தியில் இருப்பது கூட்டணி அரசுதானே?” என அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த தேர்தலில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக கூறித்தான் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்ததாகவும், ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

காங்கிரஸையும் விமர்சித்த ஸ்டாலின்

கடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்துகொண்டே காங்கிரஸ் 5 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியதாக கூறிய ஸ்டாலின், அந்த துரோகத்தை திமுக வென்றெடுத்ததாக தெரிவித்தார்.

காலாப்பட்டு, ராஜ்பவன் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அதேபோன்ற தோல்வியை தட்டாஞ்சாவடி தொகுதியிலும் காங்கிரஸ் சந்திக்க வேண்டும். காங்கிரஸுக்கு டெபாசிட் கூட கிடைக்கக்கூடாது. புதுச்சேரியைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி முடிந்து போன அத்தியாயம்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

இறுதியாக, தட்டாஞ்சாவடி தொகுதி மக்களின் குரல் சட்டப்பேரவையில் ஓங்கி ஒலிக்க, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் சேது செல்வத்துக்கு வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

Source: Read Full Article