"ரூ.3 லட்சம் மதிப்புள்ள பார்சல்கள் மாயம்"

சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் ( வயது 51 ) என்பவர் பாண்டிபஜார் பகுதியிலுள்ள கொரியர் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். இவரது கொரியர் நிறுவனத்திற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து விமானம் மூலம் வரும் பார்சல்கள் சென்னை விமான நிலைய கிடங்கிலிருந்து தனியார் டெலிவரி நிறுவனத்தின் வாகனம் மூலம் பாண்டிபஜார் கிளை அலுவலகத்தில் சேர்ப்படுகிறது.

சில நாட்கள் முன்பு அவ்வாறு வரும் பார்சல்களில் சுமார் ரூ.3,40,391/- மதிப்புள்ள 4 பார்சல்கள் காணாமல் போய் உள்ளது. இதனால் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போது, விமான நிலையத்திலிருந்து பார்சல்களை கொண்டு வரும் தனியார் டெலிவரி நிறுவனத்தில் துப்புரவு வேலை செய்து வரும் குமுதவள்ளி என்பவர் பார்சல்களை திருடியது தெரிய வந்தது.

"குற்றத்தை ஒப்புக் கொண்ட பெண்"

அந் நிறுவனத்தின் உரிமையாளர் மூலம் விசாரணை செய்த போது, குமுதவள்ளி திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்டு, திருடிய பொருட்களை விற்று செலவு செய்து விட்டதாக கூறியுள்ளார். அதில் ரூ.33,225/- பணத்தை 16.06.2026 அன்று கொடுத்து விட்டு, மீதி பணம் ரூ.3,04,166/-ஐ ஒரு வாரத்திற்குள் தருவதாக உறுதியளித்து சென்றுள்ளார்.

ஆனால் குமுத வள்ளி மீதி பணத்தை தராமல் ஏமாற்றி வந்த நிலையில், தற்போது தர வேண்டிய மீதி பணத்தை தர மறுத்துள்ளார். ஆகவே, நிறுவனத்தின் பொருட்களை திருடிச் சென்ற குமுதவள்ளி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தருமாறு ரவிச்சந்திரன் என்பவர் சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய குற்றப் பிரிவில் புகார் கொடுத்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் , திருட்டில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டை ஜே.ஜே நகர் பகுதியை சேர்ந்த குமுதவள்ளி ( வயது 55 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குமுத வள்ளி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article