காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வழங்கும் வகையில், ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு விற்பனைத் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மருதம் கூட்டுறவு சிறப்பு அங்காடியில் நடைபெற்ற தொடக்க விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் கலந்து கொண்டு சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்திராஜ் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பண்டிகைக் காலங்களில் பொதுமக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில், 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய சிறப்புத் தொகுப்பு ரூ.200 என்ற மலிவு விலையில் இன்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. பொதுமக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

காய்கறிகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவது குறித்தும், அவற்றை அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியுமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

காய்கறிகளின் விலை ஒவ்வொரு நாளும் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. அரசு நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தால் பொதுமக்களுக்கு இன்னும் குறைந்த விலையில் வழங்க முடியும் என்ற கருத்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அந்தந்தப் பகுதிகளில் விளையும் காய்கறிகளை நேரடியாகக் கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்து, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை (MRP) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் காய்கறிகளின் விலை தினந்தோறும் மாறுபடுவதால் அவற்றுக்கு ஒரே மாதிரியான விலையை நிர்ணயிக்க முடியாது என்றும் விளக்கமளித்தார்.

மளிகைத் தொகுப்பு விற்பனைக்கு மக்களிடம் வரவேற்பு உள்ளதா?

சிறப்புத் தொகுப்புகளை கவர்ச்சிகரமான முறையில் விற்பனை செய்வதை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பொதுமக்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையிலேயே பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். யாரையும் கட்டாயப்படுத்தி வாங்கச் சொல்வதில்லை. பொருட்கள் விற்பனை நிலையங்களுக்கு வந்தவுடன் உடனுக்குடன் விற்பனையாகி வருகின்றன என்று கூறினார்.

ரேஷன் அரிசியின் தரம் குறித்து அமைச்சர் விளக்கம்

நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சன்ன ரக அரிசியின் தரம் குறைவாக இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமானதாகவே உள்ளது. பொதுமக்கள் விரும்பித்தான் அதனை வாங்கிச் செல்கின்றனர் என்று தெரிவித்தார்.

பொதுமக்கள் கருத்து – வரவேற்பும் அதிருப்தியும்!

இதனைத் தொடர்ந்து சிறப்பு மளிகைத் தொகுப்புகளை வாங்க வந்த பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.

அப்போது, ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்களை வழங்குவது மகிழ்ச்சியளிப்பதாகவும், குறிப்பாக தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பது குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் சிலர் தெரிவித்தனர்.

அதேவேளையில், மளிகைப் பொருட்கள் ஒவ்வொன்றும் 100 கிராம், கால் கிலோ என குறைந்த அளவில் வழங்கப்படுவதால், சமையலுக்குப் போதுமானதாக இல்லை என்றும் சிலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

மேலும், சிறப்புத் தொகுப்புகளை வாங்குவதற்காக ஆர்வத்துடன் வந்ததாகவும், ஆனால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்பட்டதாகவும், சுமார் 30 பேருக்கு மட்டுமே விநியோகம் செய்துவிட்டு மறுநாள் வருமாறு கூறி திருப்பி அனுப்பியதாகவும் ஒரு பெண் வேதனை தெரிவித்தார்.

இதனால், மலிவு விலை மளிகைத் தொகுப்பு திட்டத்திற்கு ஒருபுறம் பொதுமக்களிடம் வரவேற்பு இருந்தாலும், பொருட்களின் அளவு மற்றும் போதிய இருப்பு இல்லாதது தொடர்பாக சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடங்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு மளிகைத் தொகுப்பு திட்டம் பொதுமக்களுக்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக அமைகிறது என்பதை வரும் நாட்களில் விற்பனை மற்றும் மக்களின் கருத்துகள் வெளிப்படுத்தும்.

Source: Read Full Article