
<p>கும்மிடிப்பூண்டி அருகே ரசாயன லாரியில் இருந்து பொருட்களை மாற்றியபோது மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1000 ரூபாய் கூலிக்காக சென்று உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இருவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.</p>
<p>திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே 7 கண் பாலம் பகுதியில் கடந்த 11ஆம் தேதி ரசாயன பொருட்களை ஏற்றி வந்த லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு பொருட்களை மாற்ற வேண்டும் என அருகே உள்ள கள்ளூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்களை அழைத்து சென்றுள்ளனர். சைனாவில் இருந்து சென்னை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டு சென்னை மணலியில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் விஜயவாடாவில் உள்ள தனியார் மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கு ரசாயன மூல பொருட்களை பக்கெட்டுகளில் ஏற்றி சென்றபோது ரசாயன பக்கெட் சில உடைத்து விட்டதால், அவற்றை மாற்ற வேண்டும் என இரண்டு மணி நேர வேலைக்கு 1000 ரூபாய் என கூறி அழைத்ததன் பேரில் 6 பேர் சென்றுள்ளனர்.</p>
<p>சுமார் 1000 ரசாயன பக்கெட்டுகள் இருந்த நிலையில், அவற்றில் இருந்து 600 பக்கெட்டுகளை மாற்றியபோது கண் எரிச்சல், வாந்தி, மூச்சு திணறல் ஏற்பட்டதால் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டு தொழிலாளர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மூச்சு திணறல் பாதிப்பு தொடர்ந்ததால் ஷாம் பொன்னேரி அரசு மருத்துவமனையிலும், சந்தோஷ், கோபி ஆகிய இருவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரம்பாக்கம் காவல்துறையினர் ரசாயன பொருளை விற்பனை செய்யும் நிறுவன உரிமையாளர், அதனை வாங்கும் நிறுவன உரிமையாளர், தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்றவர் என 7 பேர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.</p>
<p>இந்த நிலையில், 3 நாட்கள் அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை பலனின்றி சந்தோஷ் 26, பரிதாபமாக உயிரிழந்தார். கோபி, ஷாம் இருவரும் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர். 1000 ரூபாய் கூலிக்கு சென்ற தொழிலாளி பரிதாபமாக மூச்சு திணறி உயிரிழந்துள்ளார். ரசாயன பொருட்களை உரிய பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி மாற்றிட பணிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு தலையிட்டு உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>
Source: Read Full Article