முதலமைச்சருக்கு அடுத்து உச்சப்பட்ச அரசு அதிகாரம் கொண்ட நபராக இருப்பவர் தலைமைச் செயலாளர். அந்த பதவியை பிடிக்க ஒவ்வொரு முறையும் சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடையே கடும் போட்டி நிலவும். கடந்த திமுக ஆட்சியில் நிலவிய போட்டிகளையெல்லாம் எதிர்கொண்டு தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்ந்தார் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். ஆனால், தேர்தல் நேரத்தில் அவரை தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றியது தேர்தல் ஆணையம். அவருக்கு பதில் சாய்குமாரை தலைமைச் செயலாளராக நியமனம் செய்தது.

தவெக ஆட்சி அமைந்ததும் தலைமைச் செயலாளர் மாற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சாய்குமாரையே தலைமைச் செயலாளராக தொடர அனுமதித்தார் முதலமைச்சர் விஜய். அதோடு, அவர் பணி ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், சாய்குமாருக்கு ஆறு மாத காலம் பணி நீட்டிப்பும் வழங்கியிருக்கிறது தவெக அரசு.

தலைமைச் செயலாளர் பதவியை பிடிக்க போட்டா, போட்டி

இந்நிலையில், சாய்குமாரின் பணி நீட்டிப்பு முடிந்த பின்னர் தலைமைச் செயலாளர் பதவியை பிடிப்பதற்கான போட்டி இப்போதே தொடங்கியிருக்கிறது. பல சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தங்களின் லாபியையும், சாதியையும் கேடயமாக வைத்து தலைமைச் செயலாளர் பதவியை பெற முயற்சித்து வருகின்றனர். அதே நேரத்தில் தகுதியுள்ள திறமையான அதிகாரிகளும் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

போட்டியில் இருந்து விலகிய விஜயகுமார் ஐ.ஏ.எஸ்

குறிப்பாக, விஜயகுமார் ஐ.ஏ.எஸ் தலைமைச் செயலாளராக ஆக, அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரும் ஓய்வு பெறும் தருவாயில் இருக்கிறார். அதனால், மீண்டும் இன்னொரு பணி நீட்டிப்பு செய்யும் வகையில் தலைமைச் செயலாளரை இந்த முறை தவெக அரசு நியமிக்காது.

போட்டியில் யார், யார் ?

அதனடிப்படையில் பார்த்தால், மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ராஜேஸ் லக்கானி, முதலமைச்சரின் தனிச் செயலாளராக உள்ள செந்தில்குமார், காகர்லா உஷா உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் தலைமைச் செயலாளர் ரேசில் முன்னணியில் உள்ளனர்.

தற்போது முதலமைச்சரின் தனிச் செயலாளராக இருக்கும் செந்தில்குமார் தற்போதைய தனிப்பட்ட செல்வாக்கை பயன்படுத்தியும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த அமைச்சரின் ஆசியுடனும் தலைமைச் செயலாளராக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், கடந்த திமுக ஆட்சியில் கோலோச்சிக்கொண்டிருந்த காகர்லா உஷா ஐ.ஏ.எஸ்-ம் கடந்த திமுக ஆட்சியின் கோட்டை முக்கிய அதிகாரி ஒருவர் உதவியுடனுடன், ஆந்திர மாநில தொடர்புகள் மூலமும் தலைமைச் செயலாளர் பதவியை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் மட்டுமின்றி உள்துறை செயலாளர் மணிவாசன், ககன் தீப் சிங் பேடி ஆகியோரும் தலைமைச் செயலாளர் ரேசில் இருக்கின்றனர்.

ராஜேஷ் லக்கானிக்கு வாய்ப்பு

அதே நேரத்தில், மத்திய பணியில் இருந்து மீண்டும் மாநில பணிக்கு திரும்பியிருக்கும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜேஷ் லக்கானியும் தலைமைச் செயலாளர் பதவியை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சொன்ன சில கோப்புகளுக்கு ஒப்புதல் கொடுக்காத விவகாரத்தில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அவர் தமிழக பணியில் இருந்து மத்திய பணி கேட்டு வாங்கி அங்கு சென்றார். மீண்டும் தவெக ஆட்சி அமைந்த சூழலில் ராஜேஸ் லக்கானியை முதல்வர் தரப்பே மீண்டும் தமிழக பணிக்கு வரச் சொன்னதாக கூறப்படுகிறது.

லாபி செய்யும் அதிகாரிகள்

சாய்குமாருக்கு பின்னர் ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தையும் திறம்பட நிர்வகிக்க ராஜேஸ் லக்கானி சரியாக இருப்பார் என்ற கணிப்பில் அவர் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த திமுக ஆட்சியில் டிரான்ஸ்பார்மர் டெண்டர் முறைகேடு வழக்கில் ராஜேஸ் லக்கானியின் பெயரையும் சேர்த்து சிலர் பேசுவதால், அவரை தலைமைச் செயலாளராக ஆக்கக் கூடாது என சில அதிகாரிகள் அவருக்கு எதிராக லாபி செய்வதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜேஸ் லக்கானியை மின்சாரத்துறை செயலாளர் பொறுப்பில் மட்டும் நியமிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மிக்சர் அதிகாரிகளை டம்மியாக நியமிக்க கூடாது

இந்நிலையில், நிர்வாக திறமையற்ற, முக்கிய பதவிகளில் இருந்தும் ஒன்றுமே சாதிக்காத மிக்சர் அதிகாரிகளும், காக்கா பிடித்தே முக்கியமான துறைகளுக்கு கடந்த ஆட்சியில் பொறுப்பு வகித்த அதிகாரிகளும், தமிழ்நாட்டின் எல்லையான கும்பிடிப்பூண்டியை கூட தாண்டாத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலரும் தலைமைச் செயலாளர் பதவியை பிடிக்க காய்நகர்த்தி வருகின்றனர். இவர்களில் ஒருவரை தலைமைச் செயலாளராக நியமித்தால் கூட, அது தவெக ஆட்சியை முட்டுச் சந்திற்கு கொண்டுபோய் நிறுத்தும் முயற்சிதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கண்டிப்பான அதிகாரியை நியமிக்க வேண்டும்

முதன்முதலாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு திறம்பட ஆட்சியை நடத்த கண்டிப்பான, நிர்வாக திறமையுள்ள அதிகாரியை தலைமைச் செயலாளராக நியமித்தால்தான் அரசு சிறப்பாக செயல்பட முடியும், பலரின் அழுத்தங்களுக்கு ஆட்பட்டு ரெக்கமெண்டேஷனில் தலைமைச் செயலாளர் பதவியை நிரப்பினால் முதல்வர் விஜய்க்கே பல சிக்கல்கள் வந்து சேரும் என்பதும் அரசியல் ஆய்வாளர்களின் கருத்தாக இருக்கிறது.

Source: Read Full Article