Rohit-Kohli IND Vs WI ODI: இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் ரோகித் மற்றும் கோலி கூட்டணி உடைக்க வாய்ப்புள்ள சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ரோகித், கோலி களமிறங்கும் ODI தொடர்:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி, தற்போது சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே களமிறங்கி வருகின்றனர். இதனால், மிகவும் கணிசமான போட்டிகளில் மட்டுமே விளையாடி வருவதால், அவர்கள் களமிறங்கும் தொடரை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தான் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் ரோகித் மற்றும் கோலி கூட்டணி பல புதிய சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கோலி, ரோகித் சாதனைகள்:

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருமே மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சிறப்பான புள்ளி விவரங்களை கொண்டுள்ளனர். ரோகித் 35 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் 12 அரைசதங்கள் உட்பட ஆயிரத்து 613 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 162 ரன்களை எடுத்துள்ளார். அதேநேரம் கோலி 41 இன்னிங்ஸ்களில் 9 சதங்கள் மற்றும் 11 அரைசதங்கள் உட்பட இரண்டாயிரத்து 613 ரன்களை குவித்துள்ளார். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 157 ரன்களை எடுத்துள்ளார்.

ரோகித் - கோலி உடைக்க வாய்ப்புள்ள சாதனைகள்:

ஒருநாள் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எட்டிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க கோலிக்கு இன்னும் 59 ரன்கள் மட்டுமே தேவை

ஒருவேளை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் 59 ரன்களை சேர்த்தால், அதிவேகமாக 15 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைப்பார்

திருவனந்தபுரத்தில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் ஆட்டமிழக்கவே இல்லை. இலங்கைக்கு எதிரான ஒரு போட்டியில் இங்கு 166 ரன்களை குவித்துள்ளார்

இன்னும் 2 சதங்களை விளாசினால் லிஸ்ட் ஏ போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் (60 சதங்கள்) சாதனையை கோலி தகர்கக்கூடும்

இந்திய மண்ணில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சினின் (42 சதங்கள்) சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 2 சதங்கள் தேவை

உள்ளூரில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சச்சினின் (164 போட்டிகளில் 6,976 ரன்கள்) சாதனையை முறியடிக்க கோலிக்கு 109 ரன்கள் மட்டுமே தேவை

தற்போதைய சூழலில் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள ரோகித், சச்சின் மற்றும் கோலிக்கு அடுத்தபடியாக 12 ஆயிரம் ரன்களை கடந்த மூன்றாவது இந்தியர் என்ற பெருமையை பெற இன்னும் 105 ரன்கள் மட்டுமே தேவை

இந்த தொடரில் 135 ரன்களை சேர்த்தால் ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக 10 ஆயிரம் ரன்களை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார்

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்:

இந்தியா - மேற்கிந்திய தீவுகள் மோதும் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள, க்ரீன்ஃபீல்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ ஸ்டார் செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். 2027ம் ஆண்டு உலகக் கோப்பைக்கு தயாராகும் விதமாக திட்டமிடப்பட்டுள்ள இந்த தொடரானது, ரோகித் மற்றும் கோலி ஆகிய இருவருக்குமே மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்: TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை

Source: Read Full Article