கரூரில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற தேர்தல் பரப்புரை நிகழ்வில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

அரசியல் வரலாற்றின் நீங்கா துயரம்

கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி இப்போதைய முதலமைச்சரான ஜோசப் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியிருந்த நிலையில் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருச்சியில் தொடங்கினார். ஒவ்வொரு வார இறுதியிலும் 2 அல்லது 3 மாவட்டங்களில் பரப்புரை என திட்டமிட்டு செயல்பட்டு வந்தார். அந்த வகையில் செப்டம்பர் 27ம் தேதி சனிக்கிழமை அவர் கரூர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது.

சினிமாவில் இருந்து விலகி முழுக்க அரசியலுக்கு வந்த விஜயை காண ஒவ்வொரு ஊரிலும் கூடிய கூட்டங்கள் பிரதான அரசியல் கட்சியையே ஆட்டம் காண வைத்தது. அப்படியாக கரூரில் உள்ள வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.

காலை முதல் காத்துக்கிடந்த மக்கள்

அன்றைய நாளில் விஜய் நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல திட்டமிட்டார். ஆனால் வரும் வழியெங்கும் மக்கள் வெள்ளம் திரண்டு அளித்த உற்சாக வரவேற்பால் பயணம் தாமதமாகிக் கொண்டே வந்தது. கரூரில் மதியம் 12 மணிக்கு மேல் மக்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. மிக குறுகலான 100 அடி சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு தண்ணீர், உணவு என அனைத்தையும் மறந்து விஜயை காண ஆவலுடன் காத்திருந்தனர். விஜய் கரூர் வேலுசாமிபுரத்துக்கு வரவே இரவு 7.30 மணியாகி விட்டது.

தான் பயணம் செய்த பரப்புரை மேற்கொண்ட பேருந்தின் மீது மக்களிடையே சில நிமிடங்கள் உரையாற்றினார். விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே கூட்டத்தில் சிலர் மயக்க நிலைக்கு சென்றனர். அவர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து விஜய் வாகனம் அங்கிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் எதிர்பாராத துயர சம்பவம் நிகழ்ந்தது.

கூட்ட நெரிசலும் - 41 பேர் மரணமும்

விஜயின் பரப்புரை வாகனம் அங்கிருந்து நகர்ந்ததும் மக்கள் கூட்டம் கலைய ஆரம்பிக்கையில் கூட்ட நெரிசல் பிரச்னை ஏற்பட்டது. தவெகவினர் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் யாரும் பரப்புரை காண வர வேண்டாம் என அறிவுறுத்தியும் மக்கள் ஆர்வம் மிகுதியால் கூடினர். கூட்ட நெரிசலில் ஒருவரையொருவர் தற்காத்துக் கொள்ள முயல அதன் விளைவு குழந்தைகள்,பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என 41 பேர் மூச்சுத்திணறி பலியாகினர். அன்றைய இரவு தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மரண ஓலமாக அமைந்தது.

வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டிய விஜய்

இச்சம்பவத்திற்கு அப்போதைய ஆளும்கட்சியான திமுக தான் காரணம் என வீடியோ வெளியிட்டு விஜய் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அதேசமயம் அப்போதைய திமுக அரசின் சில செயல்பாடுகளும் சந்தேகத்தை கிளப்பியிருந்தது.

அதாவது மிக குறுகலான வேலுசாமிபுரத்தில் அனுமதி வழங்கியது, கூட்டம் அதிகமாக கூடும் என கணிக்க தவறியது, விஜய் வருவதற்கு முன்பே கட்டுக்கடங்காமல் கூடிய கூட்டத்தால் அசம்பாவிதம் நடக்கும் என தெரிந்தே அமைதி காத்தது என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் காவல்துறை மீது வைக்கப்பட்டது. காவல்துறை திட்டமிட்டு கூட்டத்திற்குள் தன்னை அழைத்து சென்றதாக விஜய் தெரிவித்தார்.

திமுக மீது திரும்பிய சந்தேகம்

கரூர் விபத்தில் ஒரே நேரத்தில் 41 பேர் உயிரிழந்தனர். சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் அம்மாவட்டத்துக்கு விரைந்தார். இரவோடு இரவாக உயிரிழந்தவர்கள் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓய்வுப்பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என இவை அனைத்தும் துரிதமாக நடந்தது அப்போதைய தவெக மற்றும் எதிர்க்கட்சிகளை கடும் சந்தேகத்தில் ஆழ்த்தியது. ஆனால் தங்கள் மீதான குற்றச்சாட்டை திமுக அரசு மறுத்தது.

சிபிஐ விசாரணை

இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை வேண்டும் என தவெக உச்சநீதிமன்றம் செல்ல அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. தேர்தலுக்கு முன்பு 3 முறை டெல்லி சென்று முதலமைச்சர் விஜய் விசாரணைக்கு ஆஜரானார். அதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, சிடிஆர் நிர்மல் குமார் போன்றோரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தவெக சார்பில் நிதியுதவி

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தவெக கட்சி சார்பாக ரூ.20 லட்சமும், தமிழக அரசு சார்பில் ரூ.19 லட்சமும் வழங்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பனையூருக்கு வரவழைத்து அவர்களின் காலில் விழுந்து விஜய் மன்னிப்பு கேட்டதாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர். இதற்கிடையில் 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி விஜய் முதலமைச்சரானார். கடந்த ஜூலை மாதம் கரூருக்கு சென்ற அவர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 32 பேருக்கு தகுதியின் அடிப்படையில் கருணை அடிப்படையிலான அரசு வேலைவாய்ப்பு ஆணைகளை வழங்கினார்.

கரூர் சம்பவத்தில் இவர்கள் மேல் தவறு, அவர்கள் தான் காரணம் என்பதையெல்லாம் தாண்டி இதுமுழுக்க மக்களுக்கு அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணியாக அமைந்தது. இனிமேல் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பது தான் அனைவரின் எண்ணமாக இருக்கிறது.

Source: Read Full Article