தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை, தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் வந்தால் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம் ஆகும். வரும் திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

விநாயகர் சதுர்த்தியால் தொடர் விடுமுறை:

விநாயகர் சதுர்த்தி வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுவது போல, தமிழ்நாட்டிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. திங்கள்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் தொடர் விடுமுறையாக வந்துள்ளது.

கட்டண கொள்ளை:

3 நாட்கள் விடுமுறை என்பதால் கல்விக்காக வெளியூரில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகள், ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதுபோன்ற நாட்களில் அரசுப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளிலும் பயணிகள் நிரம்பி வழிவது வழக்கம். பொதுவாக, தனியார் ஆம்னி பேருந்துகள் விசேஷ நாட்கள் என்றாலே வழக்கத்தை விட பன்மடங்கு அதிகளவு கட்டணங்கள் வசூலிப்பதை வழக்கமாக வைத்துள்ளது.

தற்போது விநாயகர் சதுர்த்திக்கும் அதே நிலை உருவாகியுள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு இன்று செல்வதற்கு ஆம்னி பேருந்துகளில் ரூபாய் 1400 ஆகும். அதிகபட்சமாக ரூபாய் 2500 வரை வசூலிக்கின்றனர். அரசுப்பேருந்தில் சென்னையில் இருந்து மதுரை செல்வதற்கு ரூபாய் 445 மட்டுமே ஆகும். சென்னையில் இருந்து நாகர்கோயில் செல்வதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 1500ல் தொடங்கி அதிகபட்சம் ரூபாய் 3500 வரை கட்டணமாக ஒரு நபருக்கு வசூலிக்கப்படுகிறது.

இதற்கு இல்லையா ஒரு முடிவு?

தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகியோரின் ஆட்சியிலும் இதேபோல கட்டணக் கொள்ளை என்பது அரங்கேறி வந்தது. விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையிலும் கட்டணக் கொள்ளை என்பது தொடர்ந்து வருகிறது. தனியார் ஆம்னி பேருந்துகள் விழாக்காலங்கள் மற்றும் தொடர் விடுமுறை காலங்களில் கட்டணக் கொள்ளை அடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.

போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேதனையுடன் தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, தீபாவளி என்று அடுத்தடுத்து விடுமுறை வர இருப்பதால் தற்போதே இந்த கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு குழு அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டிருந்தாலும் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. கண்காணிப்பு குழுவினர் அமைக்கப்பட்டும் கட்டணம் அதிகளவு வசூலிக்கப்படுவதால் குழு என்ன செய்கிறது? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Source: Read Full Article