Minister Marie Wilson: வெளிப்படையான நிர்வாகத்தால் தமிழ்நாடு அரசின் வருவாய் உயர்ந்துள்ளது என, அமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர் சந்திப்பு:

தமிழ்நாடு நிதியமைச்சர் மரிய வில்சன், ஆர். கே. நகரில் புதிய பேருந்து நிலையம் திறப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது தொகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த போக்குவரத்து அமைச்சர் விஜய் பார்த்திபன் மற்றும் முதலமைச்சர் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். 16 ஆயிரம் சதுர அடி பரளப்பளவில் ரூ.2.5 கோடி மதிப்பிலான இந்த திட்டப் பணிகள், முன்னாள் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினரின் நிதியிலிருந்து தான் இந்த பணிகள் தொடங்கப்பட்டன. அதன் காரணமாக நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்கள் வந்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும். அதேநேரம் இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. பேருந்து சேவைகளை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏசி பேருந்து சேவை, தண்டையார்பேட்டை மெட்ரோவிற்கு இணைப்பு பேருந்து சேவை உள்ளிட்ட கோரிக்கைகள் போக்குவரத்து அமைச்சரிடம் சமர்பித்துள்ளோம்” என தெரிவித்தார்.

அண்ணாமலைக்கு அமைச்சர் பதிலடி

தொடர்ந்து, லண்டனே மோசமான நிலையில் உள்ள சூழலில் அங்கு சென்று முதலமைச்சர் என்ன முதலீடு ஈர்க்கப்போகிறார், என விஜயின் வெளிநாட்டு பயணத்தை அண்ணாமலை விமர்சித்து இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்கையில், “அண்ணாமலையை ஒரு முதிர்ந்த அரசியல்வாதி என நான் நினைக்கிறேன். பாஜகவில் 7-8 வருடங்கள் இருந்துள்ளார். மாநில தலைவராக இருந்ததோடு, ஐபிஎஸ் பதவியிலும் பணியாற்றியுள்ளார். அவரிடம் இருந்து இத்தகைய கருத்துகள் வருவது நல்லதல்ல. இன்றைய சூழலில் முதலீடுகளை பெறுவதற்காக பெரும் போரே நடைபெற்று கொண்டுள்ளது. ஒரு ரூபாய் கூட மாநிலத்திற்கு ஒரு முதலீடு தான். எப்படி நீங்கள் அதை உதாசீனப்படுத்த முடியும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மென்பொருள் நிறுவனங்கள் பல பிரச்னைகளை எதிர்கொண்டு வருகின்றனர். அதிகப்படியான ஆட்குறைப்பு வேலை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சின்ன சின்ன முதலீடுகள் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே முதலமைச்சரின் பயணங்களை கிண்டல், கேலி செய்வது நல்லதல்ல” என அமைச்சர் மரிய வில்சன் விளக்கினார்.

வருவாயை பெருக்குகிறோம் - கடன் தொடர்பாக விளக்கம்

தவெக அரசின் குறுகிய காலகட்டத்தில் பெரிய திட்டங்கள் இல்லாவிட்டாலும், 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டுள்ளதே என எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பான கேள்விக்கு, “பெளிப்படையான அரசு நிர்வாகத்தை கொண்டு வந்ததற்காக முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். அதன் காரணமாகவே மாநிலத்தின் சொந்த வரி வருவாயானது, 2025-26 நிதியாண்டில் முதல் ஐந்து மாதங்களில் அதாவது ஆகஸ்ட் வரையில் 96 ஆயிரத்து 567 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், நடப்பாண்டில் அதே 5 மாதங்களில் மாநிலத்தின் வருவாய் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 104 கோடி அதாவது 12 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஊழலின்றி வரி வருவாயை பெருக்க முடியும் என்ற முதலமைச்சரின் பிரதிபலிப்பையே இது உணர்த்துகிறது.

இதையும் படியுங்கள்: Rooftop Solar Subsidy: வீட்டின் கூரை மேல் சோலார் மின் உற்பத்தி - ரூ.1 லட்சம் வரை நிதியுதவி - யாருக்கு? விண்ணப்பிப்பது எப்படி?

இந்த தரவுகள் எல்லாம் ஆன்லைனிலேயே உள்ளன. கடன்சுமையையும் குறைத்துக்கொண்டு வருகிறோம். அடுத்த காலாண்டில் பாருங்கள். வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைப்போம். இதுதொடர்பாக இனி மாதா மாதம் செய்தியாளர்களை சந்திக்க உள்ளேன். கடன் வாங்க வேண்டிய தேவை உள்ளது. காலை உணவு விரிவாக்கம், பால் கொள்முதல் விலை, தாய்மாமன் தங்க மோதிரம் போன்ற திட்டங்களை அறிவித்து இருக்கிறோம். இதனால் நிதி தேவை அதிகரிக்கிறது. அதற்கு நிகரான வருவாயை நிச்சயம் பெருக்கிவிடுவோம்” என அமைச்சர் மரிய வில்சன் விளக்கமளித்துள்ளார்.

Source: Read Full Article