தமிழக அரசியலில் திடீர் திருப்பம்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக,தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பிடித்திருந்தது. அந்த வகையில் தேர்தலில் திமுகவை வீழ்த்தி ஆட்சியை பிடித்து விடலாம் என திட்டமிட்டவர்களுக்கு ஷாக் கொடுத்தது தவெக, நடிகர் விஜய் தலைமையிலான தவெக, அதிமுகவை 3வது இடத்திற்கு தள்ளியது. இந்த கூட்டணியில் போட்டியிட்ட பாமக 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக தவெகவிற்கு பல்டி அடித்தது. அதே நேரம் அதிமுக கூட்டணியில் இருந்த பாமகவிடம் எந்த வித ஆதரவும் தவெக தரப்பு கேட்கவில்லை.

இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

இந்த நிலையில் தான் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக 6 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதனால் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எந்த நேரமும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5 தொகுதிகளில் தேர்தல் வெற்றி தொடர்பாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மீதமுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தவெக, திமுக, அதிமுக,நாம் தமிழர், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் சார்பாக வேட்பாளர்களை அறிவித்தது.எனவே 5 முனை போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், யாருக்கு தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்ற நிலையில், திமுகவும், அதிமுகவும் தங்களது கூட்டணி கட்சிகளிடம் ஆதரவை கேட்டது.

யாருக்கும் ஆதரவு இல்லை- அன்புமணி

அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் யாருக்கும் ஆதரவு இல்லையென்ற நிலைப்பாட்டை பாமக தலைவர் அன்புமணி அறிவித்தார். இதனால் அதிமுக தரப்பு கடும் அப்செட்டானது. மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் கணிதா சம்பத், திமுக சார்பில் பரந்தாமன், த.வெ.க சார்பில் மரகதம் குமரவேல், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சுகந்தி ஆகியோர் போட்டியிடுகின்றனர். மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் சமுதாயத்தின் வாக்குகள் அதிகளவில் உள்ளதால் அந்த வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் பாமகவிற்கு மோதல் ஏற்பட்டது ஏன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இபிஎஸ் மீது அன்புமணி கோபம்

அந்த வகையில் பாமகவின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது 10.5% இட ஒதுக்கீடு, இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி எந்த வித குரலும் கொடுக்கவில்லையென கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் மீது அன்புமணி கோபத்தில் இருந்துள்ளார். அடுத்ததாக தேர்தல் தேதி அறிவித்த உடன் கூட்டணி கட்சி தலைவர்களை அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி நேரடியாக தொடர்பு கொள்ளவில்லையெனவும் இதனால் அன்புமணி தரப்பு அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்ததாக மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்றால் பொது வேட்பாளரை களத்தில் இறக்கலாம் என்ற யோசனையை அன்புமணி அதிமுக தரப்பிடம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி சொன்ன ஐடியா

அந்த வகையில் புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தியை களத்தில் இறக்கலாம் எனவும், இதற்கு தான் ஆதரவு தெரிவிப்பதாக அன்புமணி கூறியுள்ளார். ஆனால் இந்த யோசனையை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்ளாமலும், எந்த வித பதிலும் அளிக்காமலும் அமைதி காத்துள்ளார். அதே நேரம் அதிமுக சார்பில் கணிதா சம்பத்தை வேட்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அன்புமணி அதிமுகவிற்கு ஆதரவு இல்லையென்ற நிலைப்பாட்டை எடுத்து அறிவித்ததாக கூறப்படுகிறது.எனவே வரும் நாட்களில் உள்ளாட்சி மன்ற தேர்தல், 2029ஆம் ஆண்டு நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article