சென்னை பல்லாவரம் - தோரைப்பாக்கம் ரேடியல் சாலைப் பகுதியில் மிகப்பெரிய அளவிலான நிலப் பரிவர்த்தனை ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. பிரபல செமிகண்டக்டர் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான KLA Tencor Software India Private Limited, 12 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ரூ.1,020 கோடிக்கும் அதிகமான தொகைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் பகுதியில் இதுவரை பதிவான மிகப்பெரிய நிலப் பரிவர்த்தனைகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத் தனிநபரிடமிருந்து நிலம் வாங்கிய KLA

இந்த நிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு தனிநபரிடமிருந்து KLA நிறுவனத்தால் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய நிலப் பரிவர்த்தனையில் சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் மற்றும் ஆலோசனை சேவைகளை வழங்கி வரும் CBRE நிறுவனம் ஆலோசகராகச் செயல்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பல்லாவரம் - தோரைப்பாக்கம் ரேடியல் சாலைப் பகுதி, எதிர்காலத்தில் பெரிய அளவிலான தொழில்துறை மற்றும் அலுவலக முதலீடுகளை ஈர்க்கும் பகுதியாக மாறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ₹3,510 கோடி முதலீடு

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் KLA Corporation, செமிகண்டக்டர் உற்பத்தித் துறைக்குத் தேவையான மேம்பட்ட ஆய்வு, அளவீடு மற்றும் செயல்முறை கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களில் உலகளவில் முக்கிய நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை அமைப்பதற்காக ரூ.3,510 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமையுமா KLA-வின் உலகளாவிய திறன் மையம்?

தற்போது KLA நிறுவனம் வாங்கியுள்ள 12 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில், அந்நிறுவனத்தின் Global Capability Centre எனப்படும் உலகளாவிய திறன் மையம் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய மையங்கள் மூலம் ஆராய்ச்சி, மென்பொருள் மேம்பாடு, பொறியியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உயர்திறன் பணியிடங்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது. எனினும், இந்த நிலத்தில் அமையவுள்ள திட்டம் தொடர்பான இறுதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை, இது எதிர்பார்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

உருவாகும் புதிய GCC காரிடார்

பல்லாவரம் - தோரைப்பாக்கம் ரேடியல் சாலை தற்போது சென்னையின் முக்கியமான வளர்ச்சி மண்டலங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அலுவலக உள்கட்டமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய பெரிய முதலீடுகள் வருவது இந்தப் பகுதியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது.

சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு எளிதாகச் செல்லக்கூடிய வகையில் அமைந்துள்ள இந்த சாலை, நகரின் முக்கிய பகுதிகளுடன் இணைப்பையும் வழங்குகிறது. இதன் காரணமாக பல்லாவரம் - தோரைப்பாக்கம் ரேடியல் சாலையை மையமாகக் கொண்டு GCC Corridor உருவாக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது.

சென்னையின் தெற்கு பகுதியின் வளர்ச்சிக்கு முக்கிய திருப்பம்

KLA நிறுவனத்தின் மிகப்பெரிய நில வாங்குதல், இந்தப் பகுதியில் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய நிறுவனங்களுக்கான அலுவலக உள்கட்டமைப்பு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் மேலும் பல முன்னணி நிறுவனங்கள் இந்த வழித்தடத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில், பல்லாவரம் முதல் தோரைப்பாக்கம் வரையிலான பகுதி சென்னையின் முக்கியமான GCC மற்றும் தொழில்நுட்ப மையங்களில் ஒன்றாக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகள், அலுவலக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் அதனைச் சார்ந்த சேவைகள் அதிகரிக்கக்கூடும். குறிப்பாக செமிகண்டக்டர் மற்றும் உயர் தொழில்நுட்பத் துறைகளில் தமிழகத்தின் நிலையை வலுப்படுத்தும் வகையில் KLA-வின் முதலீடு முக்கியத்துவம் பெறுகிறது.

Source: Read Full Article