தொடர் விடுமுறை கொண்டாட்டம்

விடுமுறை என்றாலே பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை கொண்டாட்டம் தான். அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் அடுத்தடுத்து தொடர்ந்து 3 நாள் விடுமுறை தொடர்பான அறிவிப்பு வெளியானது. அந்த வகையில் அக்டோபர் மாதம் தொடக்கமே குஷியான மாதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப்போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

01/10/2026 (வியாழக்கிழமை) 02/10/2026 (வெள்ளிக்கிழமை காந்தி ஜெயந்தி) 03/10/2026 (சனிக்கிழமை) மற்றும் 04/10/2026 (ஞாயிற்றுக்கிழமை) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழ்நாடு முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சிறப்பு பேருந்து அறிவிப்பு

அந்த வகையில், சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 01/10/2026 (வியாழக்கிழமை) அன்று 220 பேருந்துகளும், 02/10/2026 வெள்ளிக் கிழமை அன்று 115 பேருந்துகளும், 03/10/2026 சனிக்கிழமை அன்று 115 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 01/10/2026 (வியாழக்கிழமை) அன்று 1580 பேருந்துகளும், 02/10/2026 (வெள்ளிக்கிழமை) அன்று 745 பேருந்துகளும், 03/10/2026 (சனிக்கிழமை) அன்று 895 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எங்கிருந்து எங்கே.?

இதே போல பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரத்திலிருந்து 01/10/2026 (வியாழக்கிழமை) அன்று 185 பேருந்துகளும், 02/10/2026 மற்றும் 03/10/2026 ஆகிய நாட்களில் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை. திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களுக்கு ஒவ்வொரு நாளும் 90 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 04/0/12026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 1471 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 28,402 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 5497 பயணிகளும் சனிக்கிழமை அன்று 6744 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 24,123 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் TNSTC Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article