Pakkam to Paranur & Chengalpattu to Tindivanam: பாக்கம் - பரனூர், செங்கல்பட்டு - திண்டிவனம் இடையேயான சாலை திட்டங்களால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவலியாக தொடரும் போக்குவரத்து நெரிசல்:

தென்மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி வரும் பயணிகள், செங்கல்பட்டை அடைந்த பிறகு நகரத்திற்கு உள்ளே வர கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்க வேண்டியுள்ளது. குறிப்பாக விழக்காலம் மற்றும் நீண்ட வார இறுதி காலங்களில், இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும். ஒருவேளை அதையும் கடந்து வந்தால் கிளாம்பாக்கம் உங்களுக்கு மற்றொரு புதிய சவாலாக நிற்கக் கூடும். இதற்கு தீர்வு காணும் வகையில் முன்னெடுக்கப்பட்ட பெங்களூரு - சென்னை விரைவுச்சாலை திட்டத்தில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முடங்கிக் கிடந்த 25.5 கிலோ மீட்டர் நீள பணிகளுக்கு அண்மையில் மறுடெண்டர் கோரப்பட்டுள்ளது.

அதேநேரம், செங்கல்பட்டு-கிளாம்பாக்கம் போக்குவரத்து நெரிசலுக்குத் தனியான தீர்வு தேவைப்படுகிறது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இரண்டு புதிய விரைவுச்சாலை இணைப்புகளைத் திட்டமிட்டுள்ளது. ஒன்று மஹிந்த்ரா சிட்டிக்கும் கிளாம்பாக்கத்திற்கும் இடையில் அமையும், மற்றொன்று உத்திரமேரூர் அருகே உள்ள பாக்கத்திலிருந்து பரனூர் வரை திட்டமிடப்பட்டுள்ளது.

106KM நீளத்திற்கான விரைவுச் சாலை திட்டம்:

வெளியாகியுள்ள தகவல்களின்படி, 106 கிலோ மீட்டர் நீளத்திற்கான இந்த திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்தால், சென்னையின் தெற்கு அணுகுசாலையின் இந்த பரபரப்பான பகுதி வழியாக வாகனங்கள் செல்ல மற்றொரு வழி கிடைக்கும். போக்குவரத்து நெரிசலும் கணிசமாக குறையும்.

மஹிந்த்ரா சிட்டி முதல் கிளாம்பாக்கம் வரையில் சுமார் 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஆறு வழி மேம்பால பாதை அமைக்கப்பட உள்ளது

பாக்கம் முதல் பரனூர் வரை சுமார் 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு புதிய ஆறு வழி சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது

செங்கல்பட்டு முதல் திண்டிவனம் வரை 68 கிலோ மீட்டர் நீளத்திற்கு சர்வீஸ் சாலைகளுடன் வழித்தடத்தை அகலப்படுத்த திட்டம்

மஹிந்த்ரா சிட்டி டூ கிளாம்பாக்கம்:

செங்கல்பட்டிலிருந்து சென்னைக்குள் நுழையும் மக்களுக்கு, மஹிந்த்ரா சிட்டி முதல் கிளாம்பாக்கம் வரையிலான புதிய 6 வழி மேம்பால சாலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது, இந்த பகுதிகளுக்கு இடையேயான பயணத்திற்கு சுமார் 90 நிமிடங்கள் வரை ஆகிறது. இதே பயணத்தை மேம்பாலச் சாலையில் மேற்கொள்ள 15 முதல் 20 நிமிடங்கள் மட்டுமே ஆகும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜிஎஸ்டி சாலையில் சென்னையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நிறைந்திருக்கும் நாட்களில் இந்த வழித்தடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக எதிர்காலத்தில் மெட்ரோவுடன் ஒருங்கிணைக்கப்பட உள்ள இந்த மேம்பால ஆறுவழிச்சாலையானது, உள்ளூர் வாகனங்கள், அதி வேக சரக்கு வாகனங்கள் மற்றும் வெகுஜன மக்கள் பயணிக்கும் மெட்ரோ ரயில் ஆகியவற்றை ஒரே நேரத்தில் தனித்தனி வழித்தடங்களில் பயணிக்கச் செய்து, ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும்.

பாக்கம் டூ பரனூர் - விரைவுச்சாலை

உத்திரமேரூர் அருகே உள்ள பாக்கம் கிராமத்தில் இருந்து புறப்பட்டு, உத்திரமேரூர் பகுதி வழியாகச் சென்று, பாலாறு ஆற்றைக் கடந்து, காஞ்சிபுரம்-செங்கல்பட்டு நெடுஞ்சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள பரனூரைச் சென்றடைய இந்த புதிய 6 வழி விரைவுச்சாலை திட்டமிடப்பட்டுள்ளது. சுமார் 15 கி.மீ நீளத்திற்கான இந்த சாலையில் வாகனங்கள் மணிக்கு சுமார் 120 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் பயணிக்க முடியும். தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலிருந்து வரும் போக்குவரத்திற்கு முக்கியமாக உதவும். குறிப்பாக திருவண்ணாமலைப் பக்கத்திலிருந்து வரும் வாகனங்கள் உத்திரமேரூர் அருகே அணுகலைப் பெற முடியும். மேலும் இந்த புதிய இணைப்பானது தற்போதுள்ள ஜிஎஸ்டி சாலையின் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாமல், செங்கல்பட்டை அடைவதையும் எளிதாக்கும். தேவைப்பட்டால், இந்த விரைவுச்சாலையைத் தனியாகவோ அல்லது சென்னை-திருச்சி விரைவுச்சாலையின் ஒரு பகுதியாகவோ திண்டிவனம் மற்றும் அதற்கு அப்பால் வரை மேலும் விரிவுபடுத்த முடியும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: Seeman: ”துணை முதலமைச்சர் பதவிக்கு என்னிடம் பேரம் பேசிய ஆதவ் அர்ஜுனா” - என்ன ஆஃபர் தெரியுமா? சீமான் பகீர்

திண்டிவனம் டூ செங்கல்பட்டு - அகல சாலை:

68 கிலோ மீட்டர் நீளமுள்ள செங்கல்பட்டு-திண்டிவனம் சாலையை அகலப்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முன்மொழிந்துள்ளது. இந்தத் திட்டத்தில் ஆறு பிரதான சாலைகளும், சர்வீஸ் சாலைகளும் அடங்கும். தற்போது, இந்த வழித்தடத்தில் பயணிக்க சுமார் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. முன்மொழியப்பட்ட திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் பயண நேரம் சுமார் 30 நிமிடங்களாக குறையக்கூடும். அதேநேரம், இந்த வழித்தடத்தில் உள்ள குன்றுப் பகுதிகளை குடைந்து சாலை அனுமதிக்க வேண்டியுள்ளதால், இந்தத் திட்டம் இன்னும் சுற்றுச்சூழல் அனுமதிக்காகக் காத்திருக்கிறது. இந்த விரிவாக்கப் பணிகளும் புதிய விரைவுச் சாலைகளும் திட்டமிட்டபடி நடந்தால், திண்டிவனத்திலிருந்து வரும் வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரத்தில் கிளாம்பாக்கம் பகுதியைச் சென்றடையக் கூடும்.

Source: Read Full Article