"மர்மமான முறையில் சடலம்"

கோவை குனியமுத்தூர் வெத்தலைக்காரர் வீதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி ( வயது 54 ) தனியாக வசித்து வந்த இவர் , கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தகவல் அறிந்து வந்த குனியமுத்தூர் காவல் துறையினர், சடலத்தைக் கைப்பற்றி உடற் கூறாய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

போலீஸாரின் முதற்கட்ட ஆய்வில் , வீட்டில் இருந்த மூதாட்டியின் 2 பவுன் தங்கச் செயின் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இதனால் நகைக்காக இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குற்றவாளியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

"சிக்கிய வளையல் துண்டுகள்"

கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியபோது, உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திற்கு அருகில் சில உடைந்த கண்ணாடி வளையல் துண்டுகள் சிக்கின. தொடர்ந்து , அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (CCTV) காட்சிகளைத் தனிப்படை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். அப்போது , அதே பகுதியைச் சேர்ந்த இட்லி கடை உரிமையாளரான விஜயலட்சுமி ( வயது 42 ) என்பவர் மூதாட்டியின் வீட்டிற்குச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

கூர்ந்து கவனித்ததில் , வீட்டிற்குள் செல்லும் போது அவர் கைகளில் வளையல் அணிந்திருந்ததும் , வெளியே வரும் போது கையில் வளையல்கள் இல்லாமல் இருந்ததும் தெரிய வந்தது. சி.சி.டிவி காட்சி மற்றும் உடைந்த வளையல் தடயங்களின் அடிப்படையில், இட்லி கடை உரிமையாளர் விஜயலட்சுமியைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.

மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து, அவரிடமிருந்த 2 பவுன் தங்கச் செயினைக் களவாட முயன்றபோது மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். இதனால் பயந்து போன கொலையாளி , மூதாட்டியின் வாயைப் பலமாகப் பொத்தியுள்ளார். இதில் மூச்சுத் திணறி மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்தப் போராட்டத்தின் போதே கொலையாளியின் கை வளையல்கள் உடைந்து விழுந்தது விசாரணையில் அம்பலமானது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை கைது செய்தனர்.

Source: Read Full Article