திமுக ஆட்சியில் ஆசிரியர்கள் மற்றும் விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

அனைத்து வழக்குகளும் வாபஸ்

சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் சில அறிவிப்புகளை முதலமைச்சர் விஜய் வெளியிட்டார். அப்போது திமுக ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீதான வழக்குகள் குறித்து பேசினார். அதாவது, “கடந்த 2021 மே முதல் 2026 ஏப்ரல் வரை, தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

ஜனநாயக உரிமைகளை மதிக்கும் நமது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைக்களுக்கும் இவ்வரசு உறுதுணையாக நிற்கும்” என கூறினார்.

நியாயமான கோரிக்கைக்களுக்கு துணை நிற்போம்

மேலும், “திருவண்ணாமலை மாவட்டம், சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது. அதேபோல் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற நோக்கத்தோடு, விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று போராடிய விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் மனித நேயமற்ற வகையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மனிதநேய அடிப்படையிலும், ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையிலும் அனைத்து வழக்குகளையும் திரும்பப்பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதோடு, சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் அறிவிப்புக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது நீட் தேர்வு போராட்டத்தில் மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தளி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ., சி.வி.சண்முகம், அரசியல் பிரமுகர்கள் மீது போடப்பட்ட குற்றவழக்குகளைத் தவிர போராட்டங்களுக்கு போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். அமைச்சர் வன்னி அரசு பேசும்போது வழக்குகளை வாபஸ் பெறும்போது மாணவர்களின் வாழ்க்கை காப்பாற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Source: Read Full Article