தந்தை வழி மட்டுமல்ல... தாய் வழியும் உண்டு! - புதுச்சேரி சாதிச் சான்றிதழில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

தந்தை வழி மட்டுமல்ல... தாய் வழியும் உண்டு! - புதுச்சேரி சாதிச் சான்றிதழில் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு
News Image

சென்னை: புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட தாயாரின் சாதி மற்றும் பூர்வீகத்தின் அடிப்படையில், அவர்களது குழந்தைகளுக்கும் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தந்தையின் பூர்வீகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற நடைமுறையை ரத்து செய்த நீதிமன்றம், தாயாரின் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் பெறவும், அதன் மூலம் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டு பலன்களை பெறவும் குழந்தைகளுக்கு முழு உரிமை உள்ளது எனத் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் பிறந்து வளர்ந்த குழந்தைகளின் தாயார் புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்டவராக இருந்தபோதிலும், அவர்களது தந்தை வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தால், தாயாரின் சாதி அடிப்படையில் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் இருந்து வந்தது. சிலருக்கு 'புலம்பெயர்ந்தோர்' என்ற அடிப்படையில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக, புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட 28 பேர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி ஆஜராகி வாதிட்டார்.

அப்போது, புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட தாயாரின் பூர்வீக சாதியை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படாததால், அரசு வழங்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டு பலன்கள் மறுக்கப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16-வது பிரிவுகள் அனைவருக்கும் சமத்துவத்தை உறுதி செய்வதாகவும், சமூக அந்தஸ்தை தந்தையின் மூலம் மட்டுமே தீர்மானிக்க வேண்டும் என்ற பாரம்பரிய நடைமுறையை அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தொடர்ந்து கடைப்பிடிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது. பெண்ணின் பூர்வீகம் மற்றும் சமூக அடையாளத்தை திருமணத்திற்குப் பிறகு முற்றிலும் புறக்கணித்து, தந்தையின் பூர்வீகத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் வழங்குவது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பில் எதிர்ப்பு

இதற்கு புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மாநிலத்தில் கிடைக்கும் சமூக அந்தஸ்து மற்றும் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டு பலன்களை வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்தவர்கள் அப்படியே கோர முடியாது என வாதிட்டார்.

மேலும், தற்போதைய நடைமுறையில் சமூக அந்தஸ்து தந்தையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும், தாயாரின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு சாதி சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரவை பிறப்பித்தார்.

பாலின அடிப்படையிலான வேறுபாடு

நீதிபதி தனது உத்தரவில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு ஆண், வெளிமாநில பெண்ணை திருமணம் செய்து கொண்டாலும், அவர்களது குழந்தைக்கு புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டு பலன்கள் வழங்கப்படுவதாக குறிப்பிட்டார். அதே நேரத்தில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண்ணின் குழந்தைக்கு அவரது தாயின் புதுச்சேரி பூர்வீகத்தை ஏற்க மறுப்பது பாலின அடிப்படையிலான வேறுபாடாகும் என நீதிமன்றம் தெரிவித்தது.

இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் நிலையை சரிசெய்வதே தவிர, அந்த சமூக அந்தஸ்து தந்தை வழியாக வந்ததா அல்லது தாய் வழியாக வந்ததா என்பதை தீர்மானிப்பது அல்ல என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

'பெண்ணின் அடையாளம் திருமணத்துக்குப் பிறகு மறைந்துவிடக் கூடாது'

மேலும், சமூகம் ஆணாதிக்க சமூகமாக இருப்பதால் சமூக அந்தஸ்தை தந்தையின் வழியாக மட்டுமே தீர்மானிக்க முடியும் என்ற வாதத்தையும் நீதிமன்றம் ஏற்க மறுத்தது. ஒரு பெண்ணின் அடையாளம் திருமணத்திற்குப் பிறகு அவரது கணவரின் அடையாளத்தில் கரைந்து போய்விடக்கூடாது என்றும், பெண்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் சம உரிமையை வழங்கியுள்ளது என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டினார். இதனால், தந்தையின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே சாதி சான்றிதழ் வழங்கப்படும் என்ற நடைமுறை ரத்து செய்யப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற உரிமை

மேலும், வழக்கு தொடர்ந்த 28 மனுதாரர்களுக்கும் அவர்களது தாயாரின் புதுச்சேரி பூர்வீகத்தின் அடிப்படையில் உரிய சாதி சான்றிதழ்களை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த சாதி சான்றிதழ்களின் அடிப்படையில் புதுச்சேரி அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கிடைக்கும் உரிமைகள் மற்றும் இடஒதுக்கீட்டு பலன்களை அவர்கள் பெற முழு உரிமை உள்ளது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேநேரத்தில், தாயாரின் பூர்வீகம் நிரூபிக்கப்படாத நிலையில் அல்லது தவறான தகவல்கள் மற்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டால், உரிய விசாரணைக்குப் பிறகு சாதி சான்றிதழ் வழங்க மறுப்பதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பு, புதுச்சேரியை பூர்வீகமாகக் கொண்ட பெண்களை திருமணம் செய்துகொண்ட வெளிமாநில ஆண்களின் குழந்தைகளுக்கு சாதி சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீட்டு உரிமை தொடர்பான நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சினைக்கு முக்கியத்துவம் வாய்ந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks