தஞ்சை போராட்டம்- போலீஸை தாக்கிய இளைஞர்

தஞ்சையில் நேற்று சாலை மறியல் போராட்டத்தின் போது போலீசாருக்கும் அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது. அப்போது போலீஸ் எஸ்.ஐ மீது அந்த இளைஞர் கன்னத்தில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த இளைஞரை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில் அந்த இளைஞர் யார்.? தற்போது அந்த இளைஞரின் நிலை என்ன என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை போலீசார் கூறுவது என்ன.?

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட காவல்துறை கூறுகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அவ்வழியில் போக்குவரத்து நடை ஏற்பட்டிருந்தது. அப்போது, ஆகாஷ் (20) என்பவர் இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்தபோது, தொடர்ந்து ஹாரன் அடித்துள்ளார்.

இதனால், அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் மேலும் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படாமல் தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணியில் இருந்த SSI ரஹீம் தலையிட்டு ஆகாஷை அமைதிப்படுத்தி அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். அப்போது, ஆகாஷ் போலீசாரை நோக்கி தொடர்ச்சியாக ஒருமையில் மரியாதையற்ற மற்றும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார்.

நடந்தது என்ன.?

தொடர்ந்து வாக்குவாதத்தில் அந்த நபர் ஈடுபட்டதாலும் நிலைமை மேலும் மோசம் அடையாமல் கட்டுக்குள் கொண்டு வரவும் குறைந்தபட்ச பல பிரயோகத்தை SSI ரஹீம் பயன்படுத்தியுள்ளார். அதனைத் தொடர்ந்து, அந்த நபர் உடனடியாக SSI ரஹீமை கன்னத்தில் அறைந்துள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த சம்பவத்தில் அந்த நபரின் செயல் மேலும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை உருவாக்காமல் தடுக்கும் நோக்கத்திலேயே குறைந்தபட்ச பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இளைஞர் மீது ஏற்கனவே புகார்

மேலும் ஆகாஷ் மீது ஏற்கனவே தஞ்சை தாலுகா காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு பெண் ஒருவரை தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது தெரிய வருகிறது.மேலும், சில மாதங்களுக்கு முன்பு அவர் பணிபுரியும் இடத்தில் தனது மேற்பார்வையாளரிடம் தகாத மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக அவருடைய Supervisor மூலம் புகார் அளிக்கப்பட்டு, பின்னர் இருதரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டதாகவும் தெரிய வருகிறது. போலீசார் ஆகாஷை தேவையின்றி தாக்கியதாக கூறப்படும் தகவல் உண்மைக்கு மாறானது.

6 பிரிவுகளில் வழக்கு- சிறையில் அடைப்பு

அரசியல் கட்சியினருக்கும் ஆகாஷுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மேலும் முற்றி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையாக மாறாமல் தடுப்பதே போலீசாரின் முதன்மையான நோக்கமாக இருந்தது. சம்பவத்தின் போது போலீசார் தலையிட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்த இளைஞர் மீது ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞர் ஆகாஷ் மீது அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Source: Read Full Article