"இன்ஸ்டாகிராமில் ஏற்பட்ட பழக்கம்"

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் வசிக்கும் 33 வயது பெண் ஒருவர் , கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024ஆம் ஆண்டு தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் ஹரிகிருஷ்ணன் என்பவர் அந்தப் பெண்ணுக்கு அறிமுகமாகியுள்ளார்.

தான் வழக்கறிஞர் என்றும் , அந்தப் பெண்ணின் தம்பியின் நண்பர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்ட ஹரிகிருஷ்ணன், அவரது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினைக்கு சட்டரீதியாக உதவி செய்வதாகக் கூறி அவருடன் பேசி பழகி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் அவரது அந்தரங்க புகைப்படங்களை செல்போனில் எடுத்து வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பெண்ணின் உறவினர்கள் சமரசம் பேசி, அவரையும் அவரது கணவரையும் மீண்டும் சேர்த்து வைத்ததாக கூறப்படுகிறது.

அதன் பிறகு ஹரிகிருஷ்ணன் அவ்வப்போது பல்வேறு காரணங்களைக் கூறி அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், நகைகளை கொடுத்தால் அவற்றை அடகு வைத்து பின்னர் விரைவில் மீட்டுத் தருவதாகவும் கூறி அவ்வப்போது பெண்ணிடம் பணம் மற்றும் நகை வாங்கியுள்ளார்.

இதனை நம்பிய அந்தப் பெண், கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை முதல் சிறுகச் சிறுக என மொத்தம் சுமார் 155 சவரன் தங்க நகைகளை ஹரி கிருஷ்ணனிடம் கொடுத்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

"உன் அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் லீக் பண்ணிடுவேன்"

பின்னர் அந்தப் பெண்ணும் அவரது கணவரும் ஹரிகிருஷ்ணனிடம் தங்க நகைகளை திருப்பிக் கேட்டுள்ளனர். அப்போது நகைகளை திருப்பித் தர முடியாது எனக் கூறிய அவர், தொடர்ந்து நகைகளை கேட்டால் அந்தப் பெண்ணின் " உன் அந்தரங்க போட்டோவை சமூக வலைதளங்களில் லீக் பண்ணிடுவேன் " மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தான் ஏற்கனவே சிறைக்குச் சென்று வந்தவன் எனக் கூறி கொலை மிரட்டலும் விடுத்ததாக போலீஸாரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து ஹரிகிருஷ்ணன் குறித்து விசாரித்த போது, அவர் வழக்கறிஞர் இல்லை என்பதும் , பொய்யான தகவல்களை கூறி சட்ட உதவி செய்வதாக நம்ப வைத்து பழகியதும் தெரிய வந்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையெடுத்து பாதிக்கப்பட்ட பெண், தனது தங்க நகைகளை மீட்டுத் தருவதுடன், ஹரிகிருஷ்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் போலீசார் மோசடி, தமிழ்நாடு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் ( வயது 27 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார், கைது செய்யப்பட்ட ஹரிகிருஷ்ணனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Read Full Article