தஞ்சாவூர்: பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து மாற்று எரிவாயு தயாரிக்கும் புதிய அறிவியல் கண்டுபிடிப்பை மிக எளிமையாக செயல்படுத்தி கழிவு மேலாண்மையோடு ஆற்றல் தேவையை பூர்த்தி செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கி உள்ளனர் தஞ்சாவூர் அரசர் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர்கள்.

சுற்றுச்சூழலுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நெகிழி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளுக்குத் தீர்வுகாணும் வகையில், அவற்றை உயர் வெப்பநிலையில் மறுசுழற்சி செய்து சமையல் மற்றும் தொழிற்துறை பயன்பாட்டிற்கான எரிவாயுவாக மாற்றும் புதுமையான அறிவியல் மாதிரியை தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். இத்தொழில்நுட்பம் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் பிளாஸ்டிக்கை திறந்தவெளியில் எரிப்பது காற்றில் நச்சுத்தன்மையை அதிகரித்து மனித ஆரோக்கியத்திற்கும் இயற்கைக்கும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதற்கு மாற்றாக, அறிவியல்பூர்வமான வெப்பச்சிதைவு முறையைப் பயன்படுத்தி நெகிழிப் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சிதைத்து அதை மூலக்கூறுகளாக உடைத்து பயனுள்ள வாயுவாக மாற்றுவதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கமாக அமைந்துள்ளது.

இந்த அறிவியல் மாதிரியின் செயல்பாட்டு முறையானது மிகவும் சுவாரஸ்யமான மற்றும் துல்லியமான கட்டமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் காற்றடைக்கப்பட்ட ஒரு பிரத்யேக உலைக்குள் அல்லது கண்டெய்னருக்குள் அடைக்கப்படுகின்றன. அங்கு ஆக்சிஜன் முழுமையாகத் தவிர்க்கப்பட்ட சூழலில் சுமார் 300 முதல் 500 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக வெப்பநிலையில் நெகிழி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் வெப்பப்படுத்தப்படுகிறது.

காற்றற்ற சூழலில் பிளாஸ்டிக் சூடாக்கப்படுவதால் அதன் நீண்ட ஹைட்ரோகார்பன் சங்கிலிகள் உடைந்து ஆவியாக மாறுகின்றன. இவ்வாறு உருவாகும் வாயுக்கள் ஒரு பிரத்யேகக் குழாய் மூலமாக வெளியேற்றப்பட்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

இரண்டாம் கட்டமாக, உலையிலிருந்து வெளியேறும் உயர் வெப்பநிலை வாயுக்கள் மற்றொரு கண்டெய்னருக்குள் அனுப்பப்பட்டு முழுமையாகக் குளிர்விக்கப்படுகின்றன. இவ்வாறு குளிர்விக்கும்போது, அடர்த்தி அதிகமான ஹைட்ரோகார்பன்கள் திரவப் பிளாஸ்டிக் எண்ணெய்யாகப் பிரிந்து அடியில் தங்குகின்றன. இந்த எண்ணெய் மண்ணெய்க்கு மாற்று எரிபொருளாகும். அதே வேளையில், எஞ்சியிருக்கும் வாயுக்களில் இருந்து கார்பன் மோனாக்சைடு வாயு தனித்து இயங்கும் நிலையை அடைகிறது. இந்தக் கார்பன் மோனாக்சைடு வாயுவை மட்டும் தனியாகப் பிரித்தெடுத்து, ஒரு பிரத்யேகக் குழாய் வழியே மற்றொரு கண்டெய்னருக்குச் செலுத்துமாறு இந்த அறிவியல் மாதிரி திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்ட அமைப்பில், கார்பன் மோனாக்சைடு வாயு செலுத்தப்படும் அந்தக் கண்டெய்னரில் குறிப்பிட்ட அளவு தண்ணீர் வைக்கப்பட்டுள்ளது. அங்குச் செல்லும் கார்பன் மோனாக்சைடு வாயு நீராவியுடன் வேதிவினை புரிந்து, அதிக எரியும் திறனுடைய ஹைட்ரஜன் மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த 'வாட்டர் காஸ்' எனப்படும் எரியக்கூடிய வாயுவை உருவாக்குகிறது. இவ்வாறு உருவாகும் வாட்டர் காஸ் முற்றிலும் தனித்தனி சேமிப்புக் கலன்களில் அல்லது சிலிண்டர்களில் பாதுகாப்பாகச் சேகரித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் வாட்டர் காஸ் மிகச் சிறந்த எரிபொருளாகச் செயல்படும் தன்மை கொண்டது. இதை வீடுகளில் சமையல் எரிவாயுவாகப் பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழிற்சாலைகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும். வணிகரீதியான எல்பிஜி சிலிண்டர்களுக்கு மாற்று எரிபொருளாக இது விளங்குவதால், பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதிச் செலவைக் கணிசமாகக் குறைக்கவும், மக்களின் மாதாந்திர எரிபொருள் செலவைச் சேமிக்கவும் இது பெருமளவில் வழிவகுக்கும். மேலும் வெப்பப்படுத்தப்பட்ட நெகிழி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மீண்டும் மறு சுழற்சிக்கு உட்படுத்தி பிளாஸ்டிக் பொருட்களாக பயன்படுத்தலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவியல் கண்டுபிடிப்பை செயல்விளக்கமாக செய்து காண்பித்து அரசர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் எஸ்.மித்ரன், கே. விஷால் ஆகியோர் பள்ளி அளவில் நடந்த அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை தட்டிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாணவர்கள் மித்ரன், விஷால் ஆகியோர் கூறியதாவது:

சுற்றுச்சூழல் நோக்கில் பார்க்கும்போது, பிளாஸ்டிக் கழிவுகளை மண்ணில் புதைப்பதையோ அல்லது திறந்தவெளியில் எரிப்பதையோ விட இம்முறை மிகச் சிறந்தது. திறந்தவெளியில் பிளாஸ்டிக் எரியும்போது டையாக்சின் மற்றும் ஃபியூரான் போன்ற புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஆபத்தான நச்சு வாயுக்கள் வெளியேறுகின்றன. ஆனால், இந்த மூடிய கட்டுப்பாட்டு அமைப்பில் பிளாஸ்டிக் வெப்பப்படுத்தப்படுவதால், அத்தகைய நச்சுக் காற்றுகள் நேரடியாக வளிமண்டலத்தில் கலப்பது முற்றிலும் தடுக்கப்படுகிறது. மேலும், கழிவு மேலாண்மையில் மிகப்பெரிய சுமையாக இருக்கும் பிளாஸ்டிக்கை பொருளாதார மதிப்புள்ள ஆற்றலாக மாற்றுவது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.

எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பத்தை நகராட்சி மற்றும் மாநகராட்சி நிலைகளில் பெரிய அளவில் செயல்படுத்தும்போது, குப்பைக் கிடங்குகளில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு பெருமளவு குறைவதோடு, உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான ஆற்றலையும் சுயசார்புடன் உற்பத்தி செய்ய முடியும். ஒட்டுமொத்தத்தில் கழிவு மேலாண்மைக்கும் ஆற்றல் நெருக்கடிக்கும் ஒரே நேரத்தில் சிறந்த தீர்வை இது வழங்குகின்றன. தற்போது காஸ் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். இந்த முறையில் பிளாஸ்டிக் கழிவுகளையும் முழுமையாக அகற்றலாம். வெப்பப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சியாக்கி பிளாஸ்டிக் பொருட்களாக மாற்ற முடியும். இதனால் பூமியின் தன்மை மற்றும் காற்று மண்டலத்தின் மாசு போன்றவற்றை தடுக்க முடியும். இதை அடுத்தக்கட்டத்தில் செயல்படுத்த மேற்கொண்டு ஆய்வுகள் செய்து கொண்டு இருக்கிறோம். தற்போது இதனை செயல்படுத்துவதன் மூலம் மிகவும் குறைந்த அளவில் வீட்டு எரிபொருள் தேவையை நிறைவேற்றிக் கொள்ள இயலும். கார்பன் மோனாக்சைடு பிரியும் கண்டெய்னரில் சேமிப்பாகும் திரவ எரிபொருள் மண்எண்ணெய்க்கு மாற்றாக இருக்கும் என்றனர்.

மாணவர்களின் கண்டுபிடிப்பு குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பழ.பிரகதீசு கூறுகையில், பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிப்பது, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் தினசரி சமையல் எரிவாயு பிரச்சினை, விலை உயர்வு போன்றவற்றை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் இந்த கண்டுபிடிப்பை வெற்றிகரமாக செயல்படுத்தி எங்கள் பள்ளிக்கு பெருமையை சேர்ந்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பை மேலும் உயர்த்தி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவும் ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் இந்த அரிய முயற்சி மிக குறைந்த செலவில் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இதை மேலும் பெரிய அளவில் செய்யும் போது நம் மக்களின் சமையல் எரிவாயு பிரச்சினைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதில் சந்தேகமே இல்லை. எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் மாணவர்கள் இதை செய்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

உதவி தலைமை ஆசிரியை ஆர்.விஜயகுமாரி, முதுகலை இயற்பியல் ஆசிரியைகள் என்.திருமகள், எஸ்.தரண்யா ஆகியோர் கூறுகையில், நெகிழி மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும், காஸ் விலை உயர்வால் மிகுந்த அவதிக்குள்ளாகும் மக்களின் பொருளாதார சுமையை குறைக்க மிகுந்த ஆய்வுகளுக்கு பின் இந்த கண்டுபிடிப்பை மாணவர்கள் உருவாக்கி உள்ளனர். அவர்களின் சமூக சிந்தனையுடன் கூடிய இந்த செயல்பாடு பள்ளிக்கு பெருமையை சேர்த்துள்ளது. இதை இன்னும் கூடுதல் தரத்துடன் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். இதை வாட்டர் காஸ் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் போது அதன் விலை மிக, மிக குறைவாகி விடும். வரும்காலத்தில் மக்களின் எரிபொருள் தேவை இதனால் பூர்த்தியடைந்து விடும் என்றனர்.

Source: Read Full Article