விழுப்புரம்: விழுப்புரம் அருகே சவுக்கை வெட்டும் பணிக்காக 15 தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற சிறிய ரக சரக்கு வாகனம், கண்டெய்னர் லாரி மோதியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் லேசான காயமடைந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சிறிய ரக சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

விழுப்புரம் அருகேயுள்ள தென்குச்சிப் பாளையம் பகுதியைச் சேர்ந்த சவுக்கை வெட்டும் தொழிலாளர்கள் 15 பேர், திருக்கோவிலூர் பகுதியில் சவுக்கை வெட்டும் பணிக்காக சிறிய ரக சரக்கு வாகனத்தில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த சரக்கு வாகனம் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதி சர்வீஸ் சாலையில், திருக்கோவிலூர் நோக்கி செல்வதற்காக திரும்பியபோது, எதிரே வந்த கண்டெய்னர் லாரி சரக்கு வாகனம் மீது மோதியதாக தெரிகிறது.

சவுக்கை வெட்டும் தொழிலாளர்கள் காயம்

லாரி மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய சிறிய ரக சரக்கு வாகனம் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் பயணித்த சவுக்கை வெட்டும் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோர் லேசான காயமடைந்தனர்.

விபத்து ஏற்பட்டதும் அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுக்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த தொழிலாளர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் முழுமையாக கவிழ்ந்தபோதிலும், அதில் பயணித்த தொழிலாளர்கள் யாரும் வாகனத்திற்குள் சிக்கிக் கொள்ளவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கண்டெய்னர் லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் சரக்கு வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்வது பாதுகாப்பானதா என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article