வரலாறு படைக்கப் போகும் புதுச்சேரி! இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ போட்டிக்கு வீரர்கள் தயார்

வரலாறு படைக்கப் போகும் புதுச்சேரி! இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ போட்டிக்கு வீரர்கள் தயார்
News Image

புதுச்சேரி: புதுச்சேரி துத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள சி.ஏ.பி. மைதானத்தில் முதல்முறையாக இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் பங்கேற்கும் சர்வதேச கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் நேற்று (செப்.19) மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையே இரண்டு நான்கு நாள் டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டி வரும் செப்.22 முதல் 25-ம் தேதி வரையும், 2-வது போட்டி செப்.29 முதல் அக்டோபர் 2-ம் தேதி வரையும் நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் அக்டோபர் 6, 9 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதனால் துத்திப்பட்டு சி.ஏ.பி. மைதானம் அடுத்தடுத்த நாட்களில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் போட்டிகளால் களைகட்ட உள்ளது.

ஆஸ்திரேலியா ஏ அணியில் முன்னணி வீரர்கள்

நான்கு நாள் போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா ஏ அணியில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆஷஸ் தொடரில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களான பிரெண்டன் டோகெட் மற்றும் ஜே ரிச்சர்ட்சன் ஆகியோரும் அணியின் முக்கிய வீரர்களாக உள்ளனர்.

மேலும், தொடர்ந்து நடைபெற உள்ள 50 ஓவர் போட்டிகளுக்கான ஆஸ்திரேலியா ஏ அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான மஹ்லி பேர்ட்மேன் மற்றும் ஸ்பென்சர் ஜான்சன் இடம்பெற்றிருப்பதால், அந்த அணியின் பந்துவீச்சு பலம் அதிகரித்துள்ளது.

இந்தியா ஏ அணியிலும் நட்சத்திர வீரர்கள்

இந்தியா ஏ அணியிலும் முக்கிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள தேவ்தத் படிக்கல் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் இரு வடிவிலான போட்டிகளுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

காயத்திலிருந்து மீண்டு வரும் சாய் சுதர்சன் மீண்டும் களமிறங்குவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல், 2026-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்குப் பிறகு போட்டிகளில் இருந்து விலகியிருந்த நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, உடற்தகுதி அனுமதிக்கு உட்பட்டு ஒருநாள் தொடருக்கான இந்தியா ஏ அணியில் இடம்பெற்றுள்ளார்.

இதனால் இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான போட்டிகள் இளம் வீரர்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச கிரிக்கெட்டில் அனுபவம் பெற்ற வீரர்களை நேரில் காணும் வாய்ப்பையும் புதுச்சேரி ரசிகர்களுக்கு வழங்க உள்ளது.

5 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதி

தொடர் குறித்து கிரிக்கெட் சங்கத்தின் நிறுவனர் தாமோதரன் கூறுகையில், புதுச்சேரியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் சர்வதேச அளவில் விளையாடும் வீரர்களை நேரில் பார்ப்பதற்கும், அவர்களிடம் இருந்து உத்வேகம் பெறுவதற்கும் இந்த தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும் என்றார்.

கிரிக்கெட் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மயங்க் மேத்தா கூறுகையில், போட்டிக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக சி.ஏ.பி. அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், துத்திப்பட்டு மைதானத்தில் சுமார் 5,000 பார்வையாளர்கள் அமரும் வசதி இருப்பதாகவும் தெரிவித்தார். போட்டிகளை காண கணிசமான அளவில் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.

தீவிர வலைப்பயிற்சியில் வீரர்கள்

போட்டிகள் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகளைச் சேர்ந்த வீரர்கள் நேற்று துத்திப்பட்டு மைதானத்தில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதுடன், பந்துவீச்சாளர்களும் தங்களது பந்துவீச்சில் பல்வேறு நுணுக்கங்களை மேற்கொண்டு பயிற்சி செய்தனர். சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஒரே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டது அப்பகுதி கிரிக்கெட் ஆர்வலர்களின் கவனத்தையும் ஈர்த்தது.

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீசார் ஆய்வு

சர்வதேச வீரர்கள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற உள்ளதால், மைதானத்தைச் சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையொட்டி எஸ்.பி. நல்லாம் பாபு தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கணேஷ், சண்முகசுந்தரம் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் துத்திப்பட்டு சி.ஏ.பி. மைதானத்திற்கு நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மைதான நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போலீஸ் அதிகாரிகள், போட்டிகள் எவ்வித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக நடைபெறுவதற்கான நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர். மேலும், வீரர்கள், போட்டி அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அத்தியாவசிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனர்.

போட்டி நடைபெறும் நாட்களில் ரசிகர்கள் அதிகளவில் திரள்வார்கள் என்பதால், மைதான நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

புதுச்சேரி கிரிக்கெட் வரலாற்றில் புதிய அத்தியாயம்

கடந்த 2019-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) முழு உறுப்பினராக புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு புதுச்சேரியில் 19 வயதுக்குட்பட்ட சர்வதேச போட்டிகளை நடத்தும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில், இரு அணிகளிலும் குறிப்பிடத்தக்க சர்வதேச அனுபவம் கொண்ட வீரர்கள் இடம்பெறும் முழுமையான இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ தொடர் துத்திப்பட்டு மைதானத்தில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதனால் இந்த தொடர் புதுச்சேரி கிரிக்கெட் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் ஆட்டத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைப்பதால், புதுச்சேரி மட்டுமின்றி சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களிடையேயும் போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

செப்.22-ம் தேதி தொடங்கும் முதல் நான்கு நாள் போட்டியுடன் துத்திப்பட்டு மைதானத்தில் கிரிக்கெட் திருவிழா தொடங்க உள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks