விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சேவைகள், வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைகள், அவசர சிகிச்சைப் பிரிவு, மருத்துவப் பரிசோதனைகள், மருந்துகளின் இருப்பு மற்றும் விநியோகம், ஆய்வக வசதிகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவமனை வளாகத்தின் குடிநீர் வசதி, தூய்மை, மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தார். மருத்துவமனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உரிய காலக்கெடுவிற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதுடன், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைப்பதற்கும் மருத்துவர்கள், அலுவலர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் தென்பெண்ணை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் நடத்தப்படும் சிறுதானிய உணவகத்தையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உணவு தயாரிக்கும் முறை, உணவின் தரம் மற்றும் விலை குறித்து மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் கேட்டறிந்ததுடன், சிறுதானிய உணவுகளை தொடர்ந்து நல்ல முறையில் வழங்கவும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தினார்.

ரூ.2.26 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் - ஆய்வு

முன்னதாக, விக்கிரவாண்டி ஒன்றியம் அய்யூர் அகரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் State Special Assistance Phase–I (2025-26) திட்டத்தின் கீழ் ரூ.2.26 கோடி மதிப்பீட்டில் செங்கமேடு - அய்யூர் அகரம் (வாதானூர் ஓடை) இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்தப் பாலம் அமைக்கப்படுவதன் மூலம் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் போக்குவரத்து வசதி மேம்படுவதுடன், மழைக்காலங்களிலும் போக்குவரத்து இடையூறு இல்லாமல் பயனளிக்கும். எனவே, உரிய காலத்திற்குள் மேம்பாலத்தை தரமாக கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Source: Read Full Article