மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் விஜய் முகத்துக்காகவே என்னை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள் என தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “இந்த இடைத்தேர்தல் எனக்கு சவாலாக இல்லை. ஏனென்றால் முதலமைச்சர் விஜய் தனித்தே நின்று வென்றவர். அதனால் அவர் முகத்துகாக மதுராந்தகம் தொகுதி மக்கள் வாக்களிப்பார்கள். என் தந்தை எம்ஜிஆரின் ராமாபுரம் தோட்டத்தில் பணியாற்றியவர். எம்ஜிஆர் தான் எனக்கு பெயர் வைத்தார். 2014 நாடாளுமன்ற தேர்தலின் வேட்பாளர் நேர்காணலின்போது நான் இதனை ஜெயலலிதாவிடம் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து நீண்ட நேரம் பேசினார். அதை என்னால் இன்றளவும் மறுக்க முடியாது. திருமணத்திற்கு பிறகு தான் படித்தேன். என் கணவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. எனக்கு அரசியல் பிடிக்கும், இருந்தாலும் தந்தை விடவில்லை. எம்ஜிஆரின் பணத்தில் தான் நாங்கள் வளர்ந்தோம் என சொல்லலாம். அந்த விசுவாசம் எங்களுக்கு உள்ளது.

அரசியலுக்கு நான் வரக் காரணம் ஜெயலலிதா தான். அதிமுகவிலேயே நான் இளம் வயதில் எம்பி ஆன பெண் என்ற சிறப்பு எனக்கு உண்டு. நான் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றேன். 2006 திமுக ஆட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் கவுன்சிலர் தேர்தலில் தையூர் பகுதியில் நின்று நான் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். 2011ல் அதிமுக ஆளுங்கட்சியாக வந்தபிறகு நான் மீண்டும் கவுன்சிலராக வெற்றி பெற்று சேர்மனாக தேர்வு செய்யப்பட்டேன்.

ஜெயலலிதா பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவரின் வழியில் அதிமுகவில் இருந்தவர்களும் மதித்து நடப்பார்கள். கட்சிப் பணிகளைச் சிறப்பாக செய்ததால் 2014ல் காஞ்சிபுரம் எம்பியாக நிறுத்தப்பட்டேன். 2021ல் எம்.எல்.ஏ.வாக தேர்வானேன். எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தபோது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிமுக மதுராந்தகம் தொகுதியில் மட்டும் தான் வெற்றி பெற்றது. நான் மக்களுடன் மக்களாக இருப்பதால் தான் அந்த தொகுதியில் திமுகவால் நெருங்க முடியவில்லை. பல திட்டங்களை அவர்களுக்காக செய்துள்ளேன்.

22 ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்தேன். இருந்தாலும் அக்கட்சியில் இருந்து விலகியது மன வலியைத் தான் தந்தது. யாரை எதிர்த்து எம்ஜிஆர் அரசியல் செய்தார் என்பது உலகமறியும். அதன்பின் திமுகவால் ஜெயலலிதா எவ்வளவு பாதிக்கப்பட்டார், எவ்வளவு வலிமையாக தமிழ்நாட்டை ஆண்டார் என்பது தெரியும். நாம் எம்ஜிஆர் வீட்டில் வளர்ந்தவள். அதனால் கஷ்டமாக இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் எவ்வளவு கஷ்டங்கள் அதிமுகவில் இருந்தது. மே 4 தேர்தல் முடிவுக்கு மறுநாள் எடப்பாடி பழனிசாமி திமுக - அதிமுக ஆதரவு ஆட்சி என்ற முடிவை எப்படி எடுத்தார் என்பதே தெரியவில்லை. எங்களிடம் ஆலோசனை மேற்கொண்டிருந்தால் நிச்சயம் நான் ஒப்புக் கொண்டிருக்கவே மாட்டேன். காஞ்சிபுரம் அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினர் தனபால் இருவரும் 2026 தேர்தலில் நான் வெற்றிப் பெறக்கூடாது என திமுக தரப்பில் பணம் வாங்கி வேலை பார்த்தார்கள். இவை அனைத்தும் தேர்தலுக்கு முன்பே எனக்கு தெரியும். ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் எனக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்பிருக்கும் என இதனையெல்லாம் செய்தார்கள்.

நாங்கள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். கட்சியை விட்டு வெளியே போகவில்லை. அதிமுக ஐடி விங் என்னை கொச்சைப்படுத்தி பேசியது தான் வெளியேற முடிவெடுக்க காரணமாக அமைந்தது. எனக்கென சுயமரியாதை இருக்கிறது. மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்று தானே ஆதரவு கொடுத்தேன் என தோன்றியது. அதனாலேயே நான் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். நான் கட்டப்பஞ்சாயத்து, யாரிடமும் பணம் வசூலிக்க மாட்டேன். அந்தளவுக்கு இருந்ததால் தான் மக்கள் என்னை மீண்டும் தேர்வு செய்தார்கள்” என மரகதம் குமரவேல் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article