பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம்.

சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள். திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த கோயிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.சபரிமலையில் ஒவ்வொரு தமிழ் மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் ஓணம் பண்டிகை சிறப்பு வழிப்பாட்டிற்காக 24ம் தேதி முதல் 28ம் தேதி வரை சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது. அதன்பின்னர் கோயில் நடை அடைக்கப்பட்டது.
சபரிமலை கோயில் நடை திறப்பு இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் புரட்டாசி மாத பூஜைகள் நடைபெற உள்ளது.

வரும் 21-ம் தேதி வரை புரட்டாசி மாத பூஜையை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடத்துகிறார். இந்த நாட்களில் படி பூஜை உள்பட சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. புரட்டாசி மாத பூஜைக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வழக்கம்போல் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Source: Read Full Article