"நண்பனை காதலித்ததால் ஆத்திரம்"

திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கம், ராஜ் நகரை சேர்ந்தவர் யுவனேஷ் ( வயது 20 ). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கடந்த சில தினங்களாக ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த இளம்பெண் யுவனேஷின் சிறு வயது பள்ளி நண்பரான அதே பகுதி தோப்பு தெருவைச் சேர்ந்த தேகதயாளன் (எ) விக்கி ( வயது 20) என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்த காதல் விவகாரம் யுவனேஷிற்கு தெரிய வரவே , தான் ஒரு தலையாக காதலித்து வந்த அந்த இளம்பெண் தன்னை காதலிக்காமல் தனது நண்பனை காதலித்ததால் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.

ஆபாச வீடியோக்கள் மற்றும் ஆபாச குறுஞ் செய்தி - பாலியல் தொல்லை

இதனால் அந்த இளம் பெண்ணை பழிவாங்கும் நோக்கில் தினமும் இரவு நேரத்தில் தனது செல்போனில் இருந்து , அந்த பெண்ணிற்கு ஆபாச வீடியோக்கள் மற்றும் குறுஞ் செய்திகளை அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த இளம்பெண், தனது காதலனிடம் இதனை சொல்லி அழுதுள்ளார். தனது காதலி என்று தெரிந்த பின்பும், நண்பனே இவ்வாறு ஆபாச குறுஞ் செய்தி அனுப்பி தொந்தரவு செய்கிறானே, இனிமேலும் அவனை உயிரோடு விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்துள்ளார் விக்கி.

தனது மற்றொரு நண்பனான மாங்காடு, சீனிவாசகர் 3- வது தெருவை சேர்ந்த பார்த்திபன் ( வயது 26) என்பவனை துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றுள்ளார். இருவரும் யுவனேஷை மது அருந்தாலாம் வா என்று நைசாக பேச்சி கொடுத்து , யாரும் இல்லாத கொழுமணிவாக்கத்தில் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

" ஏன்டா என்ன தைரியம் இருந்தால் எனது காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவாய் "

அங்கு யுவனேஷிற்கு அளவுக்கு அதிகமாக மது கொடுத்து குடிக்க வைதுள்ளனர். பின்னர், போதை தலைக்கேறிய யுவனேஷ் தள்ளாடிய போது, "ஏன்டா என்ன தைரியம் இருந்தால் எனது காதலிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவாய்" என்று கூறி, அவனை விக்கியும், பார்த்திபனும் சேர்ந்து அருகில் கிடந்த பாட்டில் மற்றும் உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த யுவனேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தான். பின்னர், கொலைச் சம்பவம் நடந்தது வெளியில் யாருக்கும் தெரியாமல் இருப்பதற்காக, இருவரும் சேர்ந்து யுவனேஷ் உடலை பெரிய கல்லுடன் சேர்த்து மாடு கட்டுவதற்கு பயன்படுத்தும் கயிறு மூலம் இறுக்கி கட்டி, அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் வீசி சென்றுள்ளனர். இந்நிலையில், வெகுநேரமாகியும் யுவனேஷ் வீட்டிற்கு வராததால், சந்தேகம் அடைந்த உறவினர்கள் அவரை தேடத் தொடங்கினர்.

இதனால் பயந்து போன கொலையாளிகள் இருவரும், எப்படியும் போலீசில் மாட்டிக் கொள்வோம் என்று நினைத்து மாங்காடு காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளனர். மேலும் நடந்த உண்மையை போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை கொலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர். அங்கு கொலையாளிகள் இருவரும் சுட்டிக் காட்டிய பாழுங்கிணற்றில் இருந்து தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் யுவனேஷ் உடலை போலீசார் மீட்டனர். பின்னர், அதனை பிரேதப் பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

Source: Read Full Article