திருச்சி: ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துக்கும், மக்களின் வாழ்வுக்கும் நீராதாரமாக இருந்து வந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க உய்யக்கொண்டான் கால்வாய், தற்போது கழிவுநீர் கலப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் மெல்ல மெல்ல சீரழிந்து வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலத்தில் வயல்களுக்கு உயிர் கொடுத்த இந்த நீர்வழித்தடம், இன்று பல இடங்களில் துர்நாற்றம் வீசும் கழிவுநீர் கால்வாயாக மாறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி என்றாலே மலைக்கோட்டை, காவிரி என பல்வேறு அடையாளங்கள் நினைவுக்கு வரும். ஆனால், திருச்சி மாநகரத்தின் உள்ளே வளைந்து நெளிந்து ஓடி, சுற்றியுள்ள விவசாய நிலங்களுக்கு நீரையும், வளத்தையும் வழங்கிய உய்யக்கொண்டான் கால்வாய்க்கும் தனிச்சிறப்பு உண்டு. இது வெறும் நீர்வழித்தடம் மட்டுமல்ல; சோழர்களின் நீர் மேலாண்மை அறிவுக்கும், தொலைநோக்குப் பார்வைக்கும் சாட்சியாக விளங்கும் வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது.

சோழர் காலத்து நீர் மேலாண்மை

ராஜராஜ சோழன் காலத்தில் அக்கால தொழில்நுட்ப அறிவையும், நீரியல் நுட்பத்தையும் பயன்படுத்தி இந்தக் கால்வாய் உருவாக்கப்பட்டதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மன்னனின் சிறப்புப் பெயர்களில் ஒன்றான ‘உய்யக்கொண்டான்’ என்ற பெயரே கால்வாயுக்கும் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

பெட்டவாய்த்தலையில் தொடங்கும் இந்தக் கால்வாய், திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகள் வழியாக பயணித்து, வாழவந்தான்கோட்டை ஏரி வழியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சேராண்டி ஏரியுடன் இணைகிறது.

சுமார் 70 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தக் கால்வாய்க்கு சுமார் 120 கிளை வாய்க்கால்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 32 ஆயிரத்து 742 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. பல நூற்றாண்டுகளாக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு ஆதரவாக இருந்த இந்தக் கால்வாய், காவிரிக்கு அடுத்த முக்கிய நீராதாரங்களில் ஒன்றாகவும் விளங்கி வந்துள்ளது.

வயல்களுக்கு உயிர் கொடுத்த நீர்

ஒரு காலத்தில் உய்யக்கொண்டான் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய காலங்களில், அதன் கிளை வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் சென்றது. இதனால் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் செழித்து வளர்ந்தன.

முப்போகம் விளைந்த நிலங்களுக்கும் இந்தக் கால்வாயின் பங்கு இருந்ததாக விவசாயிகள் பெருமையுடன் நினைவுகூர்கின்றனர். கால்வாயில் தண்ணீர் வந்தால் வயல்களில் பசுமை பிறக்கும். வயல்கள் செழித்தால் விவசாய குடும்பங்களின் வாழ்விலும் மகிழ்ச்சி பிறக்கும். இவ்வாறு பல தலைமுறைகளின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது உய்யக்கொண்டான்.

ஆனால், நகரமயமாக்கல் வேகமெடுத்த நிலையில், இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நீர்வழித்தடம் பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கத் தொடங்கியது.

சாக்கடையாக மாறும் அவலம்

கால்வாயின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவதுடன், குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் கலப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் தண்ணீரின் இயல்பான தன்மை மாறி, பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாக கூறப்படுகிறது. துர்நாற்றம், கொசுத்தொல்லை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் விவசாயிகளின் வயல்களுக்கு உயிர் கொடுத்த நீர்வழித்தடம், இன்று பொதுமக்கள் மூக்கை மூடிக்கொண்டு கடந்து செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரியது.

அழகுபடுத்தும் பணிகள் மட்டும் போதுமா?

உய்யக்கொண்டான் கால்வாயின் கரைகளை அழகுபடுத்துதல், நடைபாதைகள் மற்றும் பூங்காக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக அரசு சார்பிலும் பல லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், கால்வாயில் கழிவுநீர் கலக்கும் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படாவிட்டால், மேற்கொள்ளப்படும் அழகுபடுத்தும் பணிகளின் நோக்கமே கேள்விக்குறியாகிவிடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கரையை அழகுபடுத்துவதுடன் நின்றுவிடாமல், கால்வாயில் கழிவுநீர் கலப்பதற்கான காரணத்தை கண்டறிந்து அதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்பதே மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

உய்யக்கொண்டான் கால்வாயில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது என்பதை அதிகாரிகள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். கால்வாயில் சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய வேண்டும்.

கழிவுநீரை கால்வாயில் திறந்துவிடும் வீடுகள், நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளை கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், கால்வாயின் இருபுறமும் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நீர்வழித்தடத்தை அவ்வப்போது தூர்வாரி, தண்ணீர் சீராக செல்லும் வகையில் பராமரிப்பதும் அவசியம். இல்லையெனில் மழைக்காலங்களில் நீரோட்டம் பாதிக்கப்படுவதுடன், விவசாயத்துக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

வரலாற்றை காப்போமா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்கள் உருவாக்கிய நீர்ப்பாசன கட்டமைப்பு இன்றளவும் பயன்பாட்டில் இருப்பது சாதாரண விஷயம் அல்ல. நவீன தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்திலேயே நீரை சேமித்து, முறையாக பகிர்ந்து, விவசாயத்தை செழிக்கச் செய்த சோழர்களின் அறிவுக்கு இது ஓர் உயிருள்ள சான்று.

அத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட உய்யக்கொண்டான் கால்வாயை வெறும் சாக்கடை கால்வாயாக மாறவிடக்கூடாது. இது திருச்சி மக்களின் வரலாற்று அடையாளம் மட்டுமல்ல; ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களின் வாழ்வாதாரத்துடனும் தொடர்புடையது.

காவிரியின் கருணையை வயல்களுக்கு கொண்டு சென்ற இந்த வரலாற்று கால்வாய், இன்று கழிவுநீரில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. சோழர்கள் உருவாக்கிய நீர்ப்பாதையை நவீன காலத்தில் நாம் காப்பாற்றப் போகிறோமா? உய்யக்கொண்டான் கால்வாயின் அழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் அது உயிர்க்கொண்டானாக மாறும் நாள் எப்போது? என்பதே தற்போது திருச்சி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Source: Read Full Article