"ஸ்க்ரப் டைஃபஸ் / உன்னிக் காய்ச்சல்" அலர்ட்

தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுப் பதிவை சிவகங்கை பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் கூறி உள்ளதாவது:

ஸ்க்ரப் டைஃபஸ் என்பது ஒருவகை ஒட்டுண்ணிக் கடியால் பரவும் காய்ச்சலாகும்.

ஓரியன்சியா சுட்சுகாமுஷி ( கண்டறிந்தவர் ஒரு ஜப்பானியர் என்பதால் அவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது) எனும் பாக்டீரியா டிக் மைட்ஸ் எனும் உன்னிகளில் தொற்றை ஏற்படுத்துகின்றது.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலாக இந்த பாக்டீரியா காணப்பட்டாலும்,

கிழக்கே பாகிஸ்தான்

மேற்கே ஜப்பான்

தெற்கே ஆஸ்திரேலியா

இந்த மூன்று நாடுகளை மூன்று புள்ளிகளாகக் கொண்டு முக்கோணம் வரைந்தால் அது "சுட்சுகாமுஷி முக்கோணம்" என்றழைக்கப்படுகிறது. இந்த முக்கோணம் இருக்கும் பகுதியில் சுமார் நூறு கோடி மக்கள் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து ரேடாரில் வருகிறார்கள் . வருடந்தோறும் இந்தப் பகுதியில் வாழும் பத்து லட்சம் பேருக்கு ஸ்க்ரப் டைஃபஸ் நோய் ஏற்பட்டு வருகிறது.

இப்பகுதியில் உள்ள மக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் அறிகுறியில் நான்கில் ஒன்று ஸ்க்ரப் டைஃபஸ் காய்ச்சலாக இருக்கிறது. தமிழ்நாடும் இந்த சுட்சுகாமுஷி முக்கோணத்துக்குள் வருகிறது.

குறிப்பாக,

சென்னை

காஞ்சிபுரம்

திருவள்ளூர்

செங்கல்பட்டு

திருப்பத்தூர்

மற்றும்

மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் ஆகியவற்றில் இந்த நோயின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது.

தொற்றுக்குள்ளான உன்னிகள் மனிதர்களைக் கடிக்கும் போது நமக்கும் தொற்று பரவுகிறது. உன்னிகளில் இந்த பாக்டீரியாக்கள் வாழ்ந்து வருகின்றன.

பாதிக்கப்பட்ட உன்னிகள் மனிதனைக் கடிக்கும் போது மனிதனுக்குப் பரவுகிறது. மனிதனன்றி பூனை, நாய், எலி போன்ற மனிதனிடம் நெருங்கி வாழும் விலங்குகளிடமும் இந்த பாக்டீரியா தொற்று ஏற்படுத்துகிறது.

நோய் பரவ வாய்ப்பு

எனவே இந்த டிக் மைட் வகை உன்னி பாதிப்புக்குள்ளான வளர்ப்புப் பிராணிகளிடம் நெருங்கிப் பழகும் மனிதர்களுக்கும் இந்த நோய் ஏற்படுத்தும் உன்னிகள் கடித்து நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

இந்தத் தொற்று மனிதனிடம் இருந்து மற்றொரு மனிதனுக்கு வேறு வழிகளில் பரவுவதில்லை. எனவே இது தொற்று நோய் இல்லை.

இவ்வாறு உன்னிக் கடி பட்டதில் இருந்து பதினான்கு நாட்களில்

காய்ச்சல்

குளிர் நடுக்கம்

உடல் சோர்வு

உடல் வலி

தலைவலி

இருமல்

நெறிகட்டிக் கொள்ளுதல் போன்றவை ஏற்படும்

கவனிக்காமல் விட்டால்

இரண்டாவது வாரம்

- பிதற்றல் நிலை

- நியூமோனியா

- குழப்ப நிலை

- கோமா

- திடீர் சுவாச செயலிழப்பு

- மஞ்சள் காமாலை

- மூளைக் காய்ச்சல் ஏற்படலாம்

கல்லீரல் , சிறுநீரகங்கள் போன்ற முக்கிய உறுப்புகள் செயலிழந்து மரணமடைவதற்கான வாய்ப்பு - 30% என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மேற்சொன்ன அறிகுறிகளுடன்

உன்னி கடித்த இடம் சிவந்து சிகரெட்டில் சுட்டது போன்ற நீள்வட்டமான புண் உருவாகும். பிறகு அந்தப் புண் கருப்பு நிறத்தில் உலரும். இதை "எஸ்கர்" என்போம்.

இந்த எஸ்கர்

நமது உடலில் கதகதப்பும் வேர்வை சுரப்பும் ஒருங்கே இருக்கும்

கழுத்து , கக்கம், அக்குள் ஆகிய இடங்களில் தென்படலாம்.

தொப்புளுக்குக் கீழே இந்தப் புண் இருக்கலாம்

பெண்களைப் பொருத்தவரை

மார்பகங்களிலும் மார்பகங்களுக்கு கீழ் உள்ள பகுதியிலும் இந்தப் புண் இருக்கலாம்.

இந்த பாக்டீரியா தொற்றுக்கு உள்ளானதும்

சிகிச்சை அளிக்காமல் கடத்தும் நாட்களில்

உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களில் தீவிர அழற்சி நிலை தோன்றும்.

ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் அழற்சி

ரத்த நாளங்களில் கசிவு

இதன் விளைவாக முக்கிய உறுப்புகள் பாதிப்புக்குள்ளாகும்.

எனவே மருத்துவரை சந்திப்பதிலும் சிகிச்சை எடுப்பதிலும் காலதாமதம் இருத்தல் கூடாது.

வயது முதிர்ந்தோர்,

ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பவர்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு கொண்டவர்கள்,

கூடவே இதய/ சிறுநீரக/கல்லீரல் சார்ந்த இணை நோய்களைக் கொண்டிருப்பவர்கள் ஆகியிருக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது தீவிரத்தன்மையுடன் வெளிப்படும் வாய்ப்பு உண்டு.

மாறிவரும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக, வெப்பமும் கூடவே ஈரப்பதமும் தொடர்ந்து நிலவுவதால் இந்த வகை உன்னிகள் நன்றாக வளர்ந்து செழிக்க முடிகின்றது.

நமது உடலில் கூட

ஈரப்பதமும் வெப்பமும் இருக்கும் பகுதிகளான அக்குள், கக்கம் ஆகிய பகுதிகளில் தான் முதலில் கடித்துப் புண் ஏற்படுத்துகிறது.

ஒருவருக்கு காய்ச்சல் அடிக்கும் போது

வேறெந்த அறிகுறிகளும் இல்லாமல்

தீவிரக் காய்ச்சல்

அதீத தலைவலி

அதீத உடல் சோர்வு

இருப்பின்

உடலில் எங்காவது சிகரெட்டால் வைத்து சுட்டது போன்ற வட்ட வடிவ புண் இருக்கிறதா? அல்லது கருப்பு நிறத்தில் வட்ட வடிவில் காய்ந்த புண் இருக்கிறதா? என்பதைப் பார்த்து அதையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

இந்த ஓரியன்சியா சுட்சுகாமுஷி பாக்டீரியா - உடல் முழுவதும் உள்ள ரத்த நாளங்களைத் தாக்கி அழற்சி ஏற்படுத்தும் என்பதால் விரைவாகக் கண்டறிந்து அதற்குரிய ஆண்டிபயாடிக் சிகிச்சை அளித்திட வேண்டும்.

டாக்சிசைக்ளின் - அசித்ரோமைசின் - க்ளோராம்ஃபெனிகால் ஆகிய ஆண்டிபயாடிக்குகள் இந்த பாக்டீரியாவுக்கு எதிராகச் சிறப்பாக செயல்படுகின்றன.

எவ்வாறு இந்தத் தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்வது?

- இந்த உன்னிகளிடம் இருந்து கடிபடாமல் இருப்பதே முதல் தற்காப்பு நடவடிக்கை

- நமது வீடுகளில் உபயோகப்படுத்தும் தலையணை மற்றும் படுக்கை விரிப்புகளை சரியாக சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும்.

- உன்னிகள் வளராதவாறு உன்னிக் கொல்லி மருந்துகளை நமது வீட்டைச் சுற்றி உள்ள பகுதிகளில் தெளித்து வர வேண்டும். ஆனால் அது பிராக்டிகலாக சாத்தியமற்றது.

- வனாந்திரங்களுக்கு ட்ரெக்கிங் , ஹைக்கிங் , டூர் செல்வீர்கள் என்றால் கொசு விரட்டி உன்னி விரட்டிக் களிம்புகளை தேய்த்துக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால்

எப்போதும் இந்த ஸ்க்ரப் டைஃபஸ் நியாபகமும் நம் அனைவருக்கும் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article