"அலுவலத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்றாலும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைக்கு அனுமதி பெற்று சாவியுடன் சென்று வரவேண்டிய சூழல்" - கஷ்டத்தை கொட்டும் வழக்கறிஞர்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாத மேலூர் நீதிமன்றம்

மதுரை மாவட்டத்தில் மேலூர் முக்கியமான பகுதியாக இருந்து வருகிறது. மேலூர் பல்வேறு கிராமங்களையும், ஒரு போக பாசனப்பகுதிகளையும் கொண்டுள்ளது. சுற்றியுள்ள கிராம மக்கள் மேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சார்ந்தே இருக்கின்றனர். இந்நிலையில் மேலூரில் உள்ள நீதிமன்றத்தை நம்பி ஏராளமான கிராம மக்கள் தீர்வுபெற வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள நீதிமன்றம் தாலுகா அலுவலகம், காவல்நிலையம், தீயணைப்பு நிலையம் என முக்கியமான இடத்திற்கு நடுவே அமைந்திருந்தாலும் பெண்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கூட இல்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.

பூட்டிக்கிடக்கும் கழிப்பறைக்கு அனுமதி

மேலும் இந்த பிரச்னை குறித்து மேலூரை சார்ந்த வழக்கறிஞர் ரஞ்சிதா பெண் வழக்கறிஞர்கள் சார்பில் நம்மிடம் கூறுகையில்...," மேலூர் சட்ட மன்ற தொகுதியில் ஏராளமான பின்தங்கிய கிராமங்கள் ஏராளமாக உள்ளது. இந்த சூழலில் தற்போதைய காலத்தில் தான் அதிகளவு பெண்கள் வழக்கறிஞர் துறைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். தற்போது 20க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் மேலூரில் உள்ளோம். ஆனால் எங்களுக்கான அடிப்படை வசதிகள் நீதிமன்ற வளாகத்தில் இல்லை. அலுவலத்தில் உள்ள கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என்றாலும் பூட்டிக்கிடக்கும் கழிப்பறைக்கு அனுமதி பெற்று சாவியுடன் சென்று வரவேண்டிய சூழல் உள்ளது. அதே போல் பெண் வழக்கறிஞர்கள் கருப்பு அங்கியை உடுத்த வேண்டும் என்றால் சிரமப்பட வேண்டியதாக உள்ளது. வழக்கு இல்லாத நேரத்தில் சாலை ஓரத்திலும், மரத்தடி நிழலும் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால் கூட வெளியில் தான் செல்ல வேண்டும். இப்படி எங்களுக்கான அடிப்படையான வசதி கிடைக்கவில்லை. இதனால் பெண் வழக்கறிஞர்கள் சிரமத்திற்கு ஆளாகிறோம். நீதிமன்றத்திற்கு வரும் சாதாரண பெண்கள் கழிப்பறை பயன்படுத்த எங்களிடம் கேட்கும் போது எங்களிடம் பதில் இல்லை. மேலும் வழக்கறிஞர்களாக ஆக வேண்டும் என ஆசைப்படும் பெண்களுக்கு கூட அடிப்படை வசதி இன்மை முட்டுக்கட்டையாக அமையலாம். எனவே இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் " என்றார்.

அமைச்சர்கள் உடனடி தலையீடு தேவை

மேலும் சமூக ஆர்வலர் & வழக்கறிஞர் ஸ்டாலின் பாஸ்கரன் கூறுகையில்...," மேலூர் நீதிமன்றம் தமிழகத்தை உலுக்கிய கிரானைட் வழக்குகளை சந்தித்த நீதிமன்றம். மேலும் பல்வேறு குற்ற வழக்குகள், பெண்கள் சார்ந்து வழக்குகள் என பல்வேறு முக்கிய வழக்குகளை சந்தித்து வருகிறது. ஆனால் பெண்களுக்காக அடிப்படை வசதி இல்லை என்பது கொடுமையானது. இதற்காக பலமுறை வழக்கறிஞர்கள் பணி நேரத்தில் வேலை நிறுத்தம் செய்து கவனம் ஈர்த்துள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் செய்துவிடலாம் என அதிகாரிகள் தெரிவித்தும் பயன் இல்லை. நீண்ட கால கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும். மேலூர் சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஸ்வநாதன் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் இணைந்து மேலூர் பெண் வழக்கறிஞர்களிடம் நேரடியாக கலந்து குறைகளை கேட்டு தீர்வு காணவேண்டும். ஒருங்கிணைந்த புதிய நீதிமன்றம் அமைத்து அதில் போதுமான வசதிகளை செய்துதர ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றார்.

Source: Read Full Article