தமிழ்நாடு சட்டமன்றத்தில் வனத்துறை மானியக் கோரிக்கையின் போது வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் பல முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். வனப் பாதுகாப்பு, பல்லுயிர் பேணல் மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ. 60.58 கோடியில் வனத் தீ மேலாண்மைத் திட்டம்

காலநிலை மாற்றத்தின் தீவிர விளைவாக தமிழ்நாட்டில் சமீபகாலமாக வனத் தீ நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. இதுவரை ஒவ்வொரு ஆண்டும் வனத் தீ ஏற்படும் பருவத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வந்த தற்காலிகத் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக, ஆண்டு முழுவதும் வனத்தீயைத் திறம்படக் கையாளும் நோக்கில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி நன்கு திட்டமிடப்பட்ட ஐந்தாண்டு கால 'தமிழ்நாடு வனத் தீ மேலாண்மைத் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் 2026-27ஆம் நிதியாண்டு முதல் 2030-31ஆம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 60.58 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.

ரூ. 10 கோடியில் 25 புதிய இயற்கைப் பூங்காக்கள்

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புற, நகர்ப்புற மற்றும் நகரை ஒட்டிய புறநகர்ப் பகுதிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக அரசு, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற பொது நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலங்களில் தலா ஒரு ஹெக்டேர் பரப்பளவில் 25 புதிய இயற்கைப் பூங்காக்கள் உருவாக்கப்படும். சுற்றுச்சூழல் சார்ந்த பொழுதுபோக்கு, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் கல்வி, உள்ளூர் பல்லுயிர் பாதுகாப்பு, சமூகப் பங்கேற்பு மற்றும் உள்ளூர் நுண்ணிய காலநிலையை மேம்படுத்துதல் ஆகிய முக்கிய நோக்கங்களுக்காக 10 கோடி ரூபாய் செலவில் இந்த இயற்கைப் பூங்காக்கள் அமைக்கப்படுகின்றன.

ரூ. 100.72 கோடியில் வனப் பணிப்படை மறுசீரமைப்பு

வனப்பாதுகாப்பு, வனஉயிரின மேலாண்மை, மனித-வனவிலங்கு மோதல்களைத் தணித்தல் மற்றும் கள அளவிலான சட்ட அமலாக்கப் பணிகளில் அதிகரித்து வரும் நவீன சவால்களை எதிர்கொள்ள வனத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வனத்துறையின் தயார்நிலை, செயல்திறன் மற்றும் சேவை வழங்கும் திறன்களை கணிசமாக உயர்த்தும் நோக்கில் 'தமிழ்நாடு வனப் பணிப்படையின் புத்துயிரூட்டல் திட்டம்' செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2026-27ஆம் ஆண்டு முதல் 2030-31 வரையிலான ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 100.72 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வனப் பணிப்படை முழுமையாக மறுசீரமைக்கப்பட்டு வலுப்படுத்தப்படும்.

Source: Read Full Article