திருமலை அருகே நாமனூரில் உள்ள நாமனிக் கண்மாயில் காணப்படும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமசின்னங்களான கல்வட்டங்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டிய தேவைக் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

'இயற்கை மரபு நடை' நிகழ்வு

சிவகங்கை திருமலைக் கோனேரிபட்டி ஊராட்சியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க திருமலைக் குன்றில் 'இயற்கை மரபு நடை' நிகழ்வு இன்று (19.09.2026) சனிக்கிழமை காலையில் நடைப்பெற்றது. உள்ளூர் வரலாறு, உள்ளூர் சுற்றுச்சூழல் குறித்த முக்கியத்துவத்தை உள்ளூர் மக்களுக்கு தெரியப்படுத்தும் இயற்கை மரபு நடையில் உள்ளூர் இளைஞர்கள், சிறுவர்கள், கிராம பொதுமக்கள், வரலாற்று ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் பங்கெடுத்தனர். சுமார் 4000 ஆண்டுகள் பழமையான பம்பர மலையில் சிகப்பு நிற பாறை ஓவியங்கள்; 2200 ஆண்டுகள் பழமையான தமிழ் பிராமி என்றழைக்கப்படும் தமிழிக் கல்வெட்டுகள், கற்படுக்கைகள், சமண சமயத்தின் அடையாளமாக கருதப்படும் சுவஸ்திக் குறீயிடு; 1200 ஆண்டுகள் பழமையான முற்கால பாண்டியர்கள் எழுப்பிய குன்றத்தூர் நாயனார் குடைவரைக் கோயில், புடைப்பு சிற்பங்கள்; 800 ஆண்டுகள் பழமையான பிற்பாண்டியர் கால மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் திருமலையில் அமைந்துள்ளது.

சுற்றுலா தளமாகவும் திருமலை விளங்குகிறது.

வரலாற்று காலத்திற்கு முந்தைய பாறை ஓவியங்கள், வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டுகள், கற்படுக்கைகள், குடைவரைக் கோயில், கற்கோயில் என பல வரலாற்று சின்னங்கள் ஒரே மலையில் காணப்படும் முக்கியத்துவம் வாய்ந்தது திருமலையாகும். தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையால் பாதுகாக்கபட்ட தொல்லியல் நினைவு சின்னமாகவும், சுற்றுலா தளமாகவும் திருமலை விளங்குகிறது.

கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

திருமலையின் வரலாற்றுச் சிறப்புகளை சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவுநர் புலவர் கா. காளிராசா அவர்கள் வந்திருந்த மக்களுக்கு எடுத்துரைத்தார். டாக்டர் அப்துல்கலாம் நற்பணி மன்றத்தின் தலைவர் அய்யனார் அவர்கள் திருமலையின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் குறித்து எடுத்துரைத்தார். திருமலையின் வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க நாம் என்ன செய்ய வேண்டுமென சேறல் ஆய்வு நடுவத்தின் உறுப்பினர் தமிழ்தாசன் எடுத்துரைத்தார். திருமலையின் வரலாறு குறித்து ஆய்வு செய்து நூலாக கொண்டு வந்த ஆய்வாளர்கள் சு. கண்ணன் மற்றும் த.கண்ணன் ஆகியோரின் பங்களிப்பு நினைவுகூறப்பட்டது. திருமலை அருகே நாமனூரில் உள்ள நாமனிக் கண்மாயில் காணப்படும் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால ஈமசின்னங்களான கல்வட்டங்களை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவித்து பாதுகாக்க வேண்டிய தேவைக் குறித்து மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. அரசிடம் இது தொடர்பான கோரிக்கை முன்வைக்க சேறல் அமைப்பின் சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது.

Source: Read Full Article