தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஆ.ராசா பேச்சும்.. விளக்கமும்

முதலமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைப் பற்றிய பேச்சைக் கண்டித்து அக்கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துக் கொண்டு பேசிய திமுக தலைவர்கள் முதலமைச்சர் விஜய், தவெக கட்சி, அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என ஒருவரையும் விட்டுவைக்காமல் சகட்டுமேனிக்கு சர்ச்சையாகவும், மிக கடுமையாகவும் விமர்சித்தனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் எதிர்ப்பை பெற்று வருகிறது. குறிப்பாக திமுக எம்பி ஆ.ராசா அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரை விமர்சிக்கும்போது பிறப்பு குறித்து சர்ச்சையான கருத்துகளை கூறினார்.

இதனைத் தொடர்ந்து தனது பேச்சுக்கு விளக்கம் கொடுத்த ஆ.ராசா, “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் அடையாளத்தை உண்மையை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் பொய் என்று கொச்சைப்படுத்தி ஏளனம் செய்ததால் ஏற்பட்ட வலியை உணர்த்த ஏளனம் செய்தவரின் அடையாளத்தை உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்” என தெரிவித்திருந்தார்.

விளாசியெடுத்த சிடிஆர் நிர்மல்குமார்

இதுதொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள சிடிஆர் நிர்மல்குமார், “மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா?..நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள்?

எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு. தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா?திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று தளபதியால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர் அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா?

குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் தளபதியின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம். நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம். புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன் “தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” என கடுமையாகவ் விமர்சித்துள்ளார்.

Source: Read Full Article