இட நெருக்கடியில் திணறும் தலைமைச்செயலகம்

தமிழக அரசின் தலையாக இருக்க கூடிய தலைமைச்செயலகம் பல நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடமாகும். 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோட்டை புனித ஜார்ஜ் கோட்டை கட்டிடத்தில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் கோரிக்கைக்காக தலைமைச்செயலகத்தில் குவிந்து வருகிறார்கள். ஆனால் தலைமைச்செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு கூட சிறிய அளவிலான அறைகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால் மக்களை சந்திக்க முடியாமல் நெரிசலில் சிக்கி திணறி வருகிறது தலைமைச்செயலகம்.

அதிலும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் அலுவலகங்கள் பிரதான கட்டிடதத்திற்கு பதிலாக தற்போது கேரேஜ் பிளாக்கில் இயங்கி வருகின்றன. எனவே புதிய தலைமைச்செயலகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகால கோரிக்கையாக உள்ளது. அந்த வகையில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடற்கரைச் சாலையில் உள்ள 26 ஏக்கர் பரப்பளவிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மகளிர் கல்லூரியை இடித்துவிட்டு புதிய தலைமைச் செயலகம் கட்ட 2003-ல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் மாணவிகள் போராட்டம் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக கை விட்டார்.

புதிய தலைமைச்செயலகம் கட்டிய கருணாநிதி

இதனையடுத்து 2006-2011 திமுக ஆட்சி காலத்தின் போது ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட புதிய தலைமைச்செயலகத்தை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். அடுத்தாக 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரான ஜெயலலிதா ஓமந்தூரார் தோட்டத்தில் அமைக்கப்பட்ட புதிய தலைமைச்செயலகத்திற்கு செல்லாமல் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மீண்டும் தலைமைச்செயலகத்தை மாற்றினார். இதனையடுத்து தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையிலேயே தலைமைச்செயலகம் இயங்கி வருகிறது.

புதிய அறைக்கு மாறும் முதலமைச்சர் விஜய்

இந்த நிலையில் தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிலையில், தலைமைச்செயலகத்தில் நெருக்கடியானது மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில், முதலமைச்சர் அலுவலகம் இட வசதி இல்லாத காரணத்தால் அதே வளாகத்தில் உள்ள 10 மாடிக்கட்டிடமான நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாற்றப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்து வருகிறது. வருகிற டிசம்பர் மாதம் மத்தியில் புதிய அறைக்கு முதலமைச்சர் விஜய் மாறவுள்ளார். இந்த நிலையில், பொதுமக்கள் வந்து செல்லும் வகையிலும், அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு என பெரிய அளவில் இட வசதியோடு புதிய தலைமைச்செயலகத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் விஜய் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது.

3 இடங்கள் எங்கே.?

அந்த வகையில் சென்னைக்குள் எந்த எந்த இடங்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. எந்த இடத்தில் இட வசதி உள்ளது என ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில், பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதி மற்றும் நந்தம்பாக்கத்தில் உள்ள பின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம். கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், அந்த வகையில் கிண்டியில் அரசுக்குச் சொந்தமான சுமார் 35 ஏக்கர் நிலமும் உள்ளது. எனவே இந்த இடங்களில் புதிய தலைமைச்செயலகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஒரு இடத்தை தேர்வு செய்து 110 விதியின் கீழ் அறிவிக்கப்படும் என தலைமைச்செயலக வட்டார தகவலாக உள்ளது.

Source: Read Full Article