சென்னை: பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் ‘நெய்தல் மீட்சி மற்றும் பாதுகாப்புப் பணிகள்’ என்ற பெயரில் சுமார் 3 கிலோமீட்டர் நீளத்திற்கு தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சௌமியா அன்புமணி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் என்பது மழைநீரை தேக்கி வைக்கும் முக்கியமான நீர்ப்பிடிப்பு பகுதியாகவும், நிலத்தடி நீரை பாதுகாக்க உதவும் இயற்கையான வெள்ளநீர் வடிகாலாகவும் உள்ளது. இதனை பாதுகாப்பதற்கு பதிலாக, அங்கு கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கவலை அளிக்கிறது.

இந்த சதுப்பு நிலம் அழிக்கப்பட்டால் அப்பகுதியை சார்ந்து வாழும் பறவைகள், ஊர்வன, மீன்கள், நீர்வாழ் உயிரினங்கள், மரங்கள், மூலிகைகள், புற்கள், நீர்வாழ் தாவரங்கள், பூச்சிகள் மற்றும் நுண்ணுயிர்கள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பாதிக்கப்படும். சதுப்பு நிலத்தை பாதுகாக்க கான்கிரீட் சுற்றுச்சுவர் அவசியமில்லை. தேவையெனில் வேலி அமைத்தாலே போதுமானது. நடைபாதை அமைக்க வேண்டும் என்றால் சதுப்பு நிலத்திற்கு வெளியே அமைக்கலாம். சதுப்பு நிலத்தின் உள்ளே நடைபாதை அமைப்பதற்கான அவசியம் இல்லை.

ரூ.21 கோடி கடன் வாங்கி இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். மழைக்காலங்களில் சதுப்பு நிலப்பகுதிக்கு வரும் மழைநீர் இயற்கையாக வெளியேறுவதற்கு தடுப்புச்சுவர் தடையாக அமையும் பட்சத்தில், பள்ளிக்கரணையைச் சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

மேலும், மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் அதிகரித்து, தொற்றுநோய் அபாயமும் ஏற்படக்கூடும் என்றும் அவர் கூறினார். கடந்த சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழைக்கே அப்பகுதியில் தண்ணீர் தேங்கத் தொடங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இப்பகுதி பொதுமக்கள் தன்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகவும், நடைபாதை மற்றும் கான்கிரீட் சுற்றுச்சுவர் தங்களுக்கு தேவையில்லை என்பதே மக்களின் கருத்தாக இருப்பதாகவும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

“மக்கள் கேட்பது நடைபாதையை அல்ல; மழைக்காலங்களில் தேங்கும் வெள்ளநீரை விரைவாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கையைத்தான்” என அவர் கூறினார்.

ரூ.21 கோடி செலவில் தேவையற்ற திட்டத்தை செயல்படுத்துவதற்கு பதிலாக, பள்ளிக்கரணை பகுதியை தூய்மைப்படுத்தவும், சதுப்பு நிலத்தை இயற்கையான முறையில் பாதுகாக்கவும் அரசு நடவடிக்கை எடுத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை தமிழக அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் சௌமியா அன்புமணி கூறினார்.

மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ‘ராம் சார்’ நிலமாக வரையறுத்து அதிகாரப்பூர்வ அறிவிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதற்கிடையே, கடந்த திமுக ஆட்சியில் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே இதுபோன்ற திட்டம் கொண்டுவரப்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு முன்வைப்பதாகவும், அந்த குற்றச்சாட்டில் உண்மைத் தன்மை உள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்று வரும் தடுப்புச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே அவரது முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Source: Read Full Article