2026 பல்வேறு ஆச்சரியங்களை கொடுத்திருக்கிறது. கட்சி ஆரம்பித்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த தவெக, முதல்முறையாக தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சரான விஜய், முதல்முறை களம் கண்டு அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆன விஜய் ரசிகர்கள் என ஏராளமான முதல்முறைகளுக்கு 2026 சொந்தம் கொண்டாடி வருகிறது.

இதற்கு மத்தியில் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவையில், பெண் எம்.எல்.ஏ.க்கள் பலர் கவனம் ஈர்த்தனர்.

குறிப்பாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி, தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த், தவெக எம்எல்ஏ குடியாத்தம் சிந்து ஆகியோர் தனித்துவ கவனம் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் முதல்முறை எம்எல்ஏவாக ஆனவர்கள். இத்துடன் காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பர்ட்டும் சிறப்பாக செயல்பட்டதாக இணையவாசிகள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.

சௌமியா அன்புமணி

- புள்ளிவிவரம் + பிரச்சினையை முன்வைக்கும் பாங்கு + நிதானமான மொழி + நகைச்சுவை

பாமக சட்டமன்றக் குழுத் தலைவரான சௌமியா அன்புமணி, 2026 சட்டப்பேரவையில் தொடர்ந்து கவனம் பெற்ற பெண் உறுப்பினர்களில் முக்கியமானவர். அவரது பேச்சுகளில் மக்கள் பிரச்சினைகள், சமூகநீதி, நீர், சூழலியல் பிரச்சினைகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

அவரது பேச்சு குறித்து கவனிக்கப்பட்ட முக்கிய அம்சம், குறிப்புகளை வாசிப்பதைப் போல இல்லாமல், இயல்பாகவும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் பேசுவது. சட்டப்பேரவைக்கு புதிதாக வந்திருந்தாலும், அனுபவமிக்க உறுப்பினரைப் போன்ற அணுகுமுறையுடன் பேசுவதாக அரசியல் விமர்சனங்கள் வந்தன.

சமூகநீதி தொடர்பான சர்வே, பள்ளிக்கரணை ஏரி, சதுப்பு நிலம், மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அமைதியாகவும் ஆழமாகவும் அவர் பேசிய வீடியோக்கள் இணையத்தை அலங்கரித்தன.

அதேபோல சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரின் செயல்பாடுகளைப் பற்றி சௌமியா பேசிய உரையும் கவனம் பெற்றது. சபாநாயகரின் நடுநிலையான அணுகுமுறையைப் பாராட்டியதுடன், நகைச்சுவை கலந்து அவர் பேசிய விதம் அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.

பிரேமலதா விஜயகாந்த்

- எளிமையான மொழி, நேரடி கேள்விகள், அதிரடி பதில்கள்

தேமுதிக பொதுச்செயலாளரும் விருத்தாசலம் எம்.எல்.ஏ.வுமான பிரேமலதா விஜயகாந்த், சட்டப்பேரவையில் மிகவும் நேரடியான குரலாக உருவெடுத்துள்ளார்.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உச்சரிப்புப் பிழைகள் உள்ளிட்ட விஷயங்களையே சுட்டிக்காட்டியதுடன், மேகதாது விவகாரத்தில் நீர் மேலாண்மை தொடர்பான கருத்துகளையும் முன்வைத்தார்.

முக்கியமாக, சட்டப்பேரவையில் தொடர்ந்து ஏற்பட்ட அமளியை அவர் கடுமையாக விமர்சித்தார். “சட்டமன்றமா? சண்டை மன்றமா?” என்ற அவரது கேள்வி பரவலாக கவனம் பெற்றது. உறுப்பினர்கள் தயாராக வந்தும் பேசுவதற்கான நேரம் கிடைக்காமல், வாக்குவாதங்களிலேயே அவை நேரம் வீணாகிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெண்கள் பாதுகாப்பு போன்ற விவகாரங்களிலும் அவர் சட்டப்பேரவையில் குரல் எழுப்பியுள்ளார்.

குடியாத்தம் சிந்து

- எளிய, இனிய குரல், தொகுதி பிரச்சினை, சமூகப் பிரச்சினை

தவெக சார்பில் குடியாத்தம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் சிந்து, புதிதாக சட்டப்பேரவைக்குள் வந்த பெண் உறுப்பினர்களில் கவனம் ஈர்த்து வருகிறார்.

குறிப்பாக காவல்துறையில் சாதி சார்பான அணுகுமுறை குறித்து அவர் எழுப்பிய கேள்வி முக்கியமானது. பாதிக்கப்பட்ட மக்கள் காவல் நிலையத்திற்கு செல்லும்போது சில காவலர்கள் சொந்த சமூக பாசத்துடனும், பிற சமூகத்தினரிடம் வெறுப்புடனும் செயல்படுவதாக வரும் குற்றச்சாட்டுகளை அவர் சுட்டிக்காட்டினார். இப்படியான அணுகுமுறை தொடர்ந்தால் காவல்துறை மீது பொதுமக்களுக்கு வெறுப்பு உருவாகும் என்றும் எச்சரித்தார்.

அதேபோல தமிழக சட்டப்பேரவைத் தொகுதிகளில் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதி தனித்தொகுதி என்று அழைக்கப்படுகிறது. இது தண்டனைபோல இருப்பதாகவும், தனித்தொகுதியை உரிமைத் தொகுதி அல்லது சிறப்புத் தொகுதி என மாற்ற வேண்டும் என்று சிந்து பேசியது பலரின் கவனத்தை ஈர்த்தது.

தாரகை கத்பர்ட்

- தகவல் சார்ந்த வாதம் + எதிர்க்கட்சியின் வாதத்துக்கு மாற்றுக் கோணம் + வரலாற்று பின்னணி

காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவர் தாரகை கத்பர்ட்,கச்சத்தீவு விவாதத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மட்டும் பேசாமல், அதனுடன் தொடர்புடைய வாட்ஜ் பேங்க் (Wadge Bank) விவகாரத்தையும் சுட்டிக்காட்டினார். “முதல் ஒப்பந்தத்தை மட்டும் பேசுகிறார்கள்; இரண்டாவது ஒப்பந்தத்தை ஏன் பேசுவதில்லை?” என்ற அவரது கேள்வி விவாதத்தை வேறு கோணத்தில் கொண்டு சென்றது.

சத்யபாமா - அவையை வழிநடத்திய பெண்

மூத்த பெண் அரசியல்வாதியான சத்யபாமா, பேச்சுக்காக மட்டுமல்ல; சட்டப்பேரவை செயல்பாட்டில் வகித்த பங்குக்காகவும் குறிப்பிடத்தக்கவர். ஒரு கட்டத்தில் மாற்று சபாநாயகராக அமர்ந்து அவையை வழிநடத்திய சத்யபாமாவின் செயல்பாட்டை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனும் பாராட்டினார்.

இந்த 5 பேரில் சௌமியா அன்புமணி மற்றும் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய இருவரும் சட்டப்பேரவைக்கு புதிதாக வந்திருந்தாலும் அமளிக்கு மத்தியில் அமைதியாகவும் அழுத்தமாகவும் தங்களது கோரிக்கைகளை பதிவு செய்தனர். இவர்கள் அனைவருக்கும் பொதுச் சமூகத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Source: Read Full Article