தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளில் சுமார் 13,000 மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

திருவிழாக்களில் கடத்தல்

சேலம் சுகவனேஸ்வரர் திருக்கோயிலில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் முன்னாள் ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “மனித குலத்தின் ஆணிவேரையே அழிக்கும் வகையில் குழந்தை திருட்டு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. திருடப்படும் பெரும்பாலான பெண் குழந்தைகள் பிச்சை எடுக்கவும், விபசாரத்திற்கும் ஒரு கும்பலால் ஈடுபடுத்தப்படுகிறது.
மூன்று நாள் ஒரு இடத்தில் பிச்சை எடுக்கும் குழந்தை அதன் பிறகு அந்த அந்த இடத்தில் பிச்சை எடுக்க வைக்கப்படுவதில்லை. 12 முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் போதைப் பொருள்களுக்கு அடிமையாக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் வைத்தியசாலைகள், மருத்துவமனைகள் மற்றும் திருவிழாக்களில் கடத்தப்படுகின்றன.

13,000 பெண் குழந்தைகளை கண்டுபிடிக்கவில்லை

தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை 9 ஆண்டுகளில் மாயமான குழந்தைகளில் சுமார் 13,000 மேற்பட்ட பெண் குழந்தைகளை இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இந்த குழந்தைகள் பெரும்பாலும் கை கால்களை ஊனமாக்கி பிச்சை எடுக்க பயன்படுத்தப்படுகின்றன. இதில் 11 வயதிற்கு மேலான குழந்தைகள் பெரும்பாலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஆனால் இதில் போலீஸ் அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. குழந்தைகள் காணாமல் போனால் மாயம் என்று வழக்கு பதிவு செய்துடன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இது தொடர்பாக நீதிமன்றங்கள் பலமுறை உத்தரவிட்டும் அதனை போலீசார் கண்டு கொள்வதில்லை. ஏழை எளிய மக்களின் குழந்தைகள் தான் அடிக்கடி காணாமல் போகிறது. ஆனால், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் குழந்தைகள் இதுவரை மாயமானதாகவும் கடத்தப்பட்டதாகவும் புகார்கள் இல்லை.

தினமும் 12 குழந்தைகள் கடத்தப்படுகிறது

போலீஸ் துறையில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. மாறாக தகுதி இல்லாதவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. முதலமைச்சர்களுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு தேவையில்லை. அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் மகப்பேறு வார்டுகளுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும் போது குழந்தை கடத்தலை தடுக்க முடியும். குழந்தை கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு15 நாட்களில் தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என மொத்தம் தினசரி 12 குழந்தைகள் கடத்தப்படுகிறது. இதனை தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Source: Read Full Article