காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் தவெகவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்தது. பெரும்பான்மை இடங்கள் கிடைக்காத பட்சத்தில் தவெகவுக்கு காங்கிரஸ், விசிக, ஐயுஎம்எல், இந்திய கம்யூனிட்ஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆட்சிக்கு வந்தால் கூட்டணி அமைச்சரவை என்பதில் முதலமைச்சர் விஜய் உறுதியாக இருந்தார். அந்த வகையில் காங்கிரஸ் கட்சிக்கு 2, விசிக மற்றும் முஸ்லீம் லீக் கட்சிக்கு தலா ஒன்று என அமைச்சரவையில் இடம் கொடுத்தார்.

அதன்படி காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வநாதன் உயர்கல்வித்துறை, ராஜேஷ்குமார் சுற்றுலாத்துறை அமைச்சர்களாகவும் உள்ளனர். தமிழ்நாட்டில் சாத்தியம் இல்லை என சொன்ன கூட்டணி ஆட்சியை நிகழ்த்தி காட்டிய தவெகவுடன் எதிர்கால தேர்தல் அனைத்திலும் கூட்டணி அமைப்போம் என காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

எதிர்பார்ப்பை உண்டாகும் நாடாளுமன்ற தேர்தல்

இந்த நிலையில் 2029ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்று முறை நடைபெற்ற தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து வருகிறார். தமிழ்நாட்டில் இளைஞர்களால் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் 2029 தேர்தலிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான பணிகள் தற்போது தொடங்கிவிட்ட நிலையில் பிரதமர் மோடி vs ராகுல் காந்தி என நிலைமை இருக்கும் என்று கணிக்கப்பட்டு வந்தது.

ஆனால் திடீரென தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்காலத்தில் பிரதமராக வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக தவெக அமைச்சர்கள் தொடங்கி ஒவ்வொருவராக சொல்லி வருவது அரசியல் உலகில் பேசு பொருளாக மாறியுள்ளது. சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்று நடத்திய கருத்துக்கணிப்பில் விஜய்க்கு பிரதமராகும் வாய்ப்பில் மூன்றாவது இடம் கிடைத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதேசமயம் இது தமிழக வெற்றிக் கழகம் - காங்கிரஸ் கூட்டணி இடையே சலசலப்பை உண்டாக்கியுள்ளது. பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது பற்றி விஜய் அல்லது தமிழக வெற்றிக் கழகம் என யாரும் இதுவரை கருத்து சொல்லவில்லை. மாறாக சட்டப்பேரவையில் தவெக அமைச்சர்கள், முதலமைச்சர் விஜயை புகழும் போது அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் பிரதமர் வேட்பாளர் விஜய் என்ற கருத்தில் காங்கிரஸ் கட்சி அதிருப்தியாக உள்ளது என்பதை அமைச்சர் ராஜேஷ்குமார் வெளிப்படையாகவே பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜேஷ்குமார் எச்சரிக்கைன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “வரும் 2029 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றி கழகம் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் காங்கிரஸ் கட்சியின் இரண்டு அமைச்சர்களும் தவெக அமைச்சரவையில் இருக்க மாட்டார்கள். இது எல்லா இடங்களிலும் நாங்கள் சொல்லக்கூடிய கருத்தாகும். ஏனென்றால் அமைச்சர் பதவியை விட கட்சி தான் எங்களுக்கு பெரியது.

கட்சி இல்லாவிட்டால் ராஜேஷ் குமார் ஒன்றும் கிடையாது. காங்கிரஸ் கட்சி என்ன நினைக்கிறதோ, நாளைக்கு இந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்ய சொன்னால் தூக்கி எறிந்து விட்டு செல்வோம். ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம், கொள்கை இருக்கலாம் அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலை தொண்டனின் முகமாக ராகுல் காந்தி உள்ளார். அவர் பிரதமராக வரவேண்டும் என்பதுதான் ஒவ்வொரு காங்கிரஸ் கட்சி தொண்டனின் விருப்பமாக உள்ளது அதை நிறைவேற்றி தீருவோம் என ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article