திமுகவின் ஊழல் கோப்புகள் குறித்து நான் பேசியதற்கு முதலமைச்சர் விஜய் பதில் எதுவும் சொல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த வாரம் சட்டசபையில் பேசிய முதலமைச்சர் விஜய், தன்னுடைய மேஜையில் 3 துறைகளில் திமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளின் ஃபைல்கள் இருப்பதாகவும், நேரம் வரும்போது அதனை வெளிக்கொண்டு வருவேன் எனவும் தெரிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், உங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அந்த ஃபைல்களை திறந்து பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என சவால் விடுத்தார். இந்த நிலையில் இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின் சட்டமன்றம் நேற்று மீண்டும் கூடியது. ஆனால் இந்த ஃபைல் விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை.

இதனிடையே திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு முதலமைச்சர் விஜயையும், தவெக அரசையும் சரமாரியாக விமர்சித்தார்.

அதாவது, “நான் கூட இந்த முதலமைச்சருக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருக்கும்ன்னு நினைத்து தான் இன்றைக்கு (நேற்று) சட்டசபைக்கு சென்றேன். இந்த நாளில் எங்கள் குடும்ப திருமணம் நிகழ்ச்சி ஒன்று இருந்தது. அதை முடித்து விட்டு 10 மணிக்கு எல்லாம் சட்டசபைக்கு சென்று விட்டேன். நான் அன்றைக்கு சொன்ன ஃபைல் பற்றி முதலமைச்சர் ஏதாவது பேசுவாரு.. இல்லையென்றால் நான் ஓபன் பண்ணி பார்த்தேன் என எதாவது சொல்லுவாருன்னு நினைத்தால் வாயை திறக்கவில்லை. ஏனென்றால் திமுக மீது பொய் குற்றச்சாட்டு வேண்டுமானால் வைக்கலாமே தவிர எதையும் நிரூபிக்க முடியாது என அவர்களுக்கு தெரியும்.

நம் தலைவர் மு.க.ஸ்டாலின் மீது எந்த குற்றமும் சொல்ல முடியாது. நம்மிடம் பூச்சாண்டி காட்டுகிறார்கள். தவெக அரசில் 3 அமைச்சர்கள் தான் சட்டசபையில் தான் அனைத்து துறைகளுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அப்படியான தவெக அமைச்சரவையில் 2,3 பேரை தவிர மற்றவர்கள் பெயர் தெரியுமா?.. போகிற இடத்தில் எல்லாம் பட்டப்பெயர் வைத்து தான் கூப்பிடுகிறார்கள். பிளாக்கில் லாட்டரி டிக்கெட் விற்பவர், முறுக்கு அமைச்சர், திருட்டு விசிடி விற்கும் அமைச்சர், உருட்டுக்கட்டை அமைச்சர், சங்கி அமைச்சர், பவுடர் அமைச்சர், பாத்ரூம் அமைச்சர் என பட்டப்பெயர் சொன்னால் தான் மக்களுக்கு தெரிகிறது.

இன்றைக்கு தவெக ஆட்சியைப் பிடித்திருக்கலாம். ஆனால் தேர்தல் வெற்றிக்கு முன்னால் அவர்களுக்கே ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை கிடையாது. மக்கள் முழுமையாக தவெகவை தேர்வு செய்யவில்லை. தவெக ஆட்சியில் மாற்றம் மாற்றம் என சொல்லி எங்குப் பார்த்தாலும் ஊழல். ஏமாற்றத்தை தந்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. தவெக ஆட்சிக்கு வந்து 105 நாட்களில் அதிகமாக பாதிக்கப்பட்டது விவசாயிகள் தான்” என உதயநிதி தெரிவித்தார்.

குவியும் கண்டனம்

முதலமைச்சர் விஜய் தொடங்கி தவெக அமைச்சர்கள், MLAக்களை தொடர்ச்சியாக திமுகவின் மூத்த தலைவர்கள் தொடங்கி
தொண்டர்கள் வரை ஒருமையிலும், கடுமையான வார்த்தையிலும் விமர்சிக்கின்றனர். இந்த பேச்சு மக்கள் மத்தியில் பெரும்
கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது உதயநிதியும் முதலமைச்சர் விஜயை தரக்குறைவாக பேசியிருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்ப்புகளைப் பெற்றுள்ளது.

Source: Read Full Article