TVK Govt Investment Conclave: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின் இன்றைய முதலீட்டாளர்கள் மாநாட்டில், மொத்தம் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

வெற்றி முதலீட்டாளர் மாநாடு..!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசின், வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இன்று நடைபெற உள்ளது. புதிய அரசு அமைந்த பிறகு மாநில அரசு சார்பில் நடைபெறும் முதல் முதலீட்டாளர் நிகழ்வு என்பதால் மிகப்பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் ஒட்டுமொத்தமாக 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளனவாம். முதலமைச்சர் விஜய் தலைமையிலான இன்றைய மாநாட்டில் 67 ஆயிரத்து 452 கோடிக்கும் அதிகமான முதலீடுகள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை பயன்பட்டிற்கு வந்தவுடன் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 998 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

20 மாவட்டங்களுக்கான முதலீடு

இன்று நடைபெற உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாகும் ஒப்பந்தங்கள் சுமார் 20 மாவட்டங்களுக்கான, தொழில் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புகளை ஈர்க்க உள்ளதாம். இதன் மூலம் ஒட்டுமொத்த மாநிலத்தின் பொருளாதார சூழலும் உயரக்கூடும் என அரசு தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த மே 10ம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்போற்று இன்றோடு 95 நாட்கள் ஆகிறது. இதுநாள் வரை ரூ.35,062 கோடி மதிப்பிலான ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் 14,790 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் 2026-2027 ஆம் ஆண்டுக்கான தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்று 67 ஆயிரத்து 452 கோடி மதிப்பிலான 97 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளனவாம்.

முதலமைச்சர் விஜய் தீவிரம்:

1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கில், தொழில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக பொறுப்பேற்ற நாள் முதலே தலைமை செயலகத்தில், பல்வேறு நிறுவனங்களின் உயர்மட்ட அதிகாரிகளுடன் சந்திப்பை நிகழ்த்தினார். தொழில் தொடங்க உரிய வசதிகள் செய்து தருவதோடு, ஒத்துழைப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்து இருந்தார். இந்நிலையில் இன்று நடைபெறும் மாநாட்டில் முன்னணி உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் வணிகக் குழுக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் கீர்த்தனா நம்பிக்கை:

இதுதொடர்பாக பேசியுள்ள தமிழ்நாடு தொழில் மற்றும் முதலீட்டு மேம்பாட்டிற்கான அமைச்சர் கீர்த்தனா, “நிலையான பொருளாதார வளர்ச்சி என்பது கூட்டாண்மை, நம்பிக்கை மற்றும் செயலாக்கம் ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்படுகிறது என்று எங்கள் அரசாங்கம் எப்போதும் நம்பி வருகிறது. வெற்றி தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2026, வாய்ப்புகளை உருவாக்குதல், தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தை வரையறுக்கும் தொழில்துறைகளைக் கட்டியெழுப்புதல் ஆகிய எங்களது லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. ஆகஸ்ட் 13 அன்று இந்தியா மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்களையும் வணிகத் தலைவர்களையும் வரவேற்பதை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article