தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக உரையாற்றிய விளவங்கோடு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீனின் பேச்சு பலரையும் கவர்ந்தது. அதிலும் அவர் தமிழை மலையாளத்தில் எழுதி வைத்து பேசியது பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர்

தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியும், அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது இரு பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு உறுப்பினர்களும் எழுந்து பட்ஜெட் மீதான விமர்சனம், தமிழக அரசு மீதான கருத்து, தங்களுடைய கோரிக்கைகள் போன்றவற்றை தெரிவித்து வருகின்றனர்.

கவனம் ஈர்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன்

அப்போது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரவீன் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்தினார். தான் சார்ந்த தொகுதியின் பல பிரச்னைகளை எடுத்துரைத்தார். அவர் பேசி முடிக்கையில் மொழி வாரி மாநிலங்களாக தமிழ்நாடு - கேரளா பிரிக்கப்பட்டபோது விளவங்கோடு பகுதியில் வாழும் பழங்குடியின மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. வனத்துறைக்கும், வருவாய்த்துறைக்கும் இடையே சரியான ஒத்துழைப்பு இல்லாமல் இருந்ததே இதற்கு காரணமாகும்.

ஆனால் இப்போது அந்த மக்களுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு வந்திருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்கேயும் ஊழல் இல்லை. லஞ்சம் இல்லை. ஒரு நல்ல ஆட்சி வந்ததால் நியாயம் இருந்தால், நாம் கேட்டால் நடக்கும் என்ற நம்பிக்கை அந்த ஏழை, எளிய மக்களுக்கு வந்துள்ளது. இதனை பெண்கள், தாய்மார்கள் சொல்லி கேட்டிருக்கிறேன் என சொல்லவும் தவெக எம்.எல்.ஏ.க்கள் உற்சாகமாகி மேஜையை தட்டினர். மேலும் அவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானது.

இதில் சுவாரஸ்மாயமான விஷயம் என்னவென்றால் பிரவீனுக்கு தமிழ் அவ்வளவாக பேச வராது. அவர் சட்டசபையில் தமிழை தங்க்லீஷ் போல மலையாளத்தில் எழுதி வார்த்தை பிறழாமல் சரியாக உச்சரித்து உரையாற்றினார். இது மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. பலரும் யார் இந்த பிரவீன் என இணையத்தில் தேடி வருகின்றனர்.

யார் இந்த பிரவீன்?

டி.டி. பிரவீன் விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது கட்சியின் உள்ளூர் பிரமுகர்களால் கடும் பிரச்னை எழுந்தது. அவர் தென் கேரள சி.எஸ்.ஐ பேராலயத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருந்ததால் சர்ச்சை எழுந்தது. உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பளிக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. பிரவீன் தவெக வேட்பாளரை வீழ்த்தி 20,970 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த சி.எஸ்.ஐ பேராலய நிர்வாகியான பிரவீனுக்கு வாய்ப்பளிப்பதன் மூலம் கேரளா, விளவங்கோடு தொகுதி மக்களின் வாக்குகளை அள்ளலாம் என காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பளித்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோரத் தொகுதியான விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்த பிரவீன் M.Tech., பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article