டாடா நெக்ஸான் பெட்ரோல் காரின் அடிப்படை மாடலை வாங்குவதற்கான EMI மற்றும் முன்பணம் குறித்த திட்டத்தை கீழே காணலாம்.

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விற்பனை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது. மக்களிடையே டாடா வாகனங்கள் மீதான நம்பிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதால், வருங்காலங்களில் இதன் மீதான மோகம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீடு

குறிப்பாக, பாதுகாப்பான, வலிமையான கட்டமைப்பு வடிவமைப்பு மற்றும் அதிக சிறப்பம்சங்கள் நிறைந்த காம்பாக்ட் எஸ்யூவி கார் என்றால், வாங்குபவர்களின் நினைவிற்கு முதலில் வருவது டாடா நெக்ஸான் (Tata Nexon) தான். 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்த வாகனம், அதன் பிரிவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

பலரும் இந்த காரை வாங்க விரும்பினாலும், முழுத் தொகையையும் ஒரே முறையில் ரொக்கமாகச் செலுத்துவது அனைவரின் பட்ஜெட்டிற்கும் சாத்தியமில்லாத ஒன்றாகும்.

ரூ.2 லட்சம் போதும்

இந்த பண்டிகைக் காலத்திலோ அல்லது வரும் நாட்களிலோ நெக்ஸான் காரின் அடிப்படை மாடலை உங்கள் முதல் எஸ்யூவியாக வாங்கத் திட்டமிட்டிருந்தால், வெறும் ரூ.2 லட்சத்தை முன்பணமாகச் செலுத்தி இதனை வீட்டிற்கு கொண்டு செல்லலாம்.

விலை விவரங்களைப் பொறுத்தவரை, நெக்ஸான் ஸ்மார்ட் பெட்ரோல் மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.7.37 லட்சமாக உள்ளது. இதனுடன் ஆர்டிஓ, சாலை வரி, வாகன காப்பீடு மற்றும் பிற அரசு வரிகள் சேர்க்கப்படும்போது, ஆன் ரோடு விலை சுமார் ரூ.8.28 லட்சமாக இருக்கும். உள்ளூர் வரிகள் மற்றும் இன்சூரன்ஸ் பாலிசிகளுக்கு ஏற்ப மாநிலங்களில் இதில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

ரொக்கமாக ரூ.2 லட்சம் முன்பணம் செலுத்திய பிறகு, மீதமுள்ள ரூ.6.28 லட்சத்தை நீங்கள் தேசியமயமாக்கப்பட்ட அல்லது தனியார் வங்கிகளில் கடனாகப் பெற வேண்டும். இந்தத் தொகைக்கு 9% வருடாந்திர வட்டி விகிதத்தில் 7 ஆண்டுகளுக்குக் கடன் பெற்றால், மாதாந்திர இஎம்ஐ ரூ.10,111 ஆக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் வங்கிக்குச் செலுத்தும் மொத்த வட்டி சுமார் ரூ.2.21 லட்சமாகும்.

இஎம்ஐ திட்டம்

கடன் சுமையை விரைவாக முடித்து வட்டியைச் சேமிக்க நினைப்பவர்கள் 5 ஆண்டு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அதே 9% வட்டியில் ரூ.6.28 லட்ச கடனுக்கு, இஎம்ஐ சற்று அதிகரித்து ரூ.13,036 ஆக இருக்கும். ஆனால், 5 ஆண்டுகளில் நீங்கள் செலுத்தும் மொத்த வட்டி வெறும் ரூ.1.54 லட்சம் மட்டுமே என்பதால் நேரடியாக பல்லாயிரக்கணக்கான ரூபாயைச் சேமிக்க முடியும்.

சிபில் ஸ்கோர் முக்கியம்

காரை முன்பதிவு செய்யும் முன், உங்கள் சிபில் ஸ்கோர் 750-க்கும் மேல் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் வங்கிகள் 9% என்ற குறைவான வட்டியில் கடன் வழங்கும். இதன்மூலம் இஎம்ஐ தொகையை மேலும் குறைக்கலாம். உங்கள் அன்றாடச் செலவுகளைப் பாதிக்காதவாறு நிதிநிலைக்கு ஏற்ப கடனைக் கால அளவைத் தீர்மானிப்பதுடன், 2 அல்லது 3 வெவ்வேறு வங்கிகளின் லோன் திட்டங்கள் மற்றும் பிராசஸிங் கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்குவது சிறந்த முடிவாக இருக்கும்.

Source: Read Full Article