தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகள், பொதுத்துறை விழாக்கள், பட்டமளிப்பு உள்ளிட்ட கல்வி நிறுவன விழாக்களில் முதலில் பாட வேண்டும் என்று இன்று முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார். இதை அனைத்துக் கட்சியினரும் ஆதரித்ததால் ஒரு மனதாக தீர்மான நிறைவேறியது.

ஆனால், 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததுமே தமிழ்த்தாய் வாழ்த்தை அரசு நிகழ்ச்சிகளில் முதலில் பாட வேண்டும் என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அங்கீகாரம் செய்து அறிவித்தும் அரசாணை வெளியிடப்பட்டது. இதனையே மீண்டும் ஒருமுறை தீர்மானமாக முதல்வர் விஜய் பேரவையில் நிறைவேற்றியிருக்கிறார் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு அறிவித்த அறிவிப்பு

கடந்த 2021 டிசம்பர் 12ஆம் தேதி அன்றைய திமுக ஆட்சியில் தலைமைச் செயலாளாராக இருந்த இறையன்பு ஒரு அரசாணையை பிறப்பித்தார். அதில், அரசு விழாக்கள், பொது நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதை நெறிப்படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக, தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் அந்த அரசாணை வெளியிடப்பட்டது.

அரசாணையில் இருந்தது என்ன ?

தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய ’நீராரும் கடலுடுத்த’ எனும் பாடல் பாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கை, 1913ஆம் ஆண்டின் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஆண்டறிக்கையில் இடம்பெற்றது. இந்த பாடலை தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக 1914ஆம் ஆண்டு முதல், கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் பாடி வந்துள்ளனர். மேலும், கர்ந்தைத் தமிழ்ச் சங்கத்தை தாய்ச் சங்கமாக கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளில் உருவான தமிழ்ச் சங்கங்களின் விழாக்களிலும் பாடலாக இப்பாடல் பாடப்பட்டது.

இதனை தமிழக அரசின் பாடலாக அறிவிக்க வேண்டும் என்பதை அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவுக்கு கரந்தைத் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கோரிக்கையாக வைத்தனர். தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்களின் நீண்ட கோரிக்கையை ஏற்று, 1970ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 11ஆம் நாள் அன்று நடந்த அரசு விழாவில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் பேசும்போது, ‘இனித் தமிழக அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இருக்கும். ‘நீராரும் கடலுடுத்த’ எனும் மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய பாடலே தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக அமையும் என்று அறிவித்தார்கள்.

அதே நேரத்தில் ‘நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடலை 1970ஆம் ஆண்டும் நவம்பர் திங்கள் 23ஆம் நாள் கலைஞர் தலைமையிலான அன்றைய தமிழ்நாடு அரசு தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவித்ததோடு உரிய அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. என குறிப்பிடப்பட்டது.

மாநில பாடலாக்கிய திமுக அரசு

இதனையடுத்து, அன்னைத் தமிழ் மொழியை போற்றிடும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதை நெறிமுறைப்படுத்த வேண்டியதாக குறிப்பிட்டு கீழ்கண்ட உத்தரவை அன்றைய திமுக அரசு பிறப்பித்தது.

அதன்படி, மனோன்மணியம் சுந்தரனார் இயற்றிய ’நீராரும் கடலுடுத்த’ என்று தொடங்கும் பாடல் தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்

என்று குறிப்பிட்டு அறிவிப்பும் அதனையடுத்து அரசாணையும் வெளியிடப்பட்டது

Source: Read Full Article