இந்திய இலங்கை அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி இன்று முடிந்துள்ளது. இந்திய அணியின் பிரதான வெற்றி வாய்ப்பு இன்று காலை ஆட்டம் தொடங்கியபோது இருந்த நிலையில், அதை தனி ஆளாக தவிடுபொடியாக்கினார் இலங்கை வீரர் சோனல் தினுஷா.

காப்பாற்றிய சோனல் தினுஷா:

முதல் இன்னிங்சில் இந்தியா 509 ரன்களை குவித்த நிலையில், இலங்கை அணி முதல் இன்னிங்சில் தடுமாறியபோது அந்த அணிக்காக சிறப்பாக ஆடியவர் சோனல் தினுஷா. அவர் 162 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 103 ரன்கள் குவித்தும் அவரால் இலங்கையை ஃபாலோ ஆன் ஆவதில் இருந்து காப்பாற்ற முடியவில்லை.

290 ரன்களுக்கு இலங்கை ஆல் அவுட்டான நிலையில், ஃபாலோ ஆன் ஆகிய இலங்கை அணி மீண்டும் ஆட்டத்தை தொடங்கியது. சூர்யபண்டாரா 92 ரன்கள் எடுத்து அவுட்டாக 218 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தபோது இலங்கை தோல்வியின் பிடியில் சிக்கியிருந்த நிலையில், மெல்ல மெல்ல அணியை மீட்கத் தொடங்கினார் சோனல் தினுஷா.

வெற்றியைப் பறித்த வில்லன்:

சோனல் தினுஷா தனி ஆளாக நிதானமாகவும், பொறுமையாகவும் ஆடினார். டெயிலண்டர் நுவந்தா-வை மறுமுனையில் வைத்துக்கொண்டு அவர் நிதானமாகவும், பொறுப்புடன் ஆடினார். மெல்ல மெல்ல இந்தியாவிடம் இருந்து ஆட்டத்தை அவர் பறிக்கத் தொடங்கினார்.

பிரசித் கிருஷ்ணா, சிராஜ், மானவ் சுதர், சரன்ஸ், ஜடேஜா என இந்திய பந்துவீச்சு படையும், கில், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரல் ஆகியோர் வீசியும் கடைசி வரை சோனல் தினுஷாவை வீழ்த்தவே இயலவில்லை. கடைசிவரை அவுட்டாகாத தினுஷா 264 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 133 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதனால், தோல்வியின் பிடியில் இருந்த இலங்கை அணி இந்த போட்டியை டிரா செய்தது.

தனி ஒருவன்:

இந்த போட்டியில் இலங்கையை தனி ஆளாக மீட்டுக் கொடுத்த சோனல் தினுஷா இலங்கையின் புதிய வரவாக உருவெடுத்துள்ளார். இவர் இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 606 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 133 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 2 அரைசதங்கள், 3 சதங்கள் அடங்கும்.

கடந்தாண்டு வங்கதேச அணிக்கு எதிராக அறிமுகமாகிய தினுஷா இலங்கையின் புதிய நட்சத்திரமாக தற்போது உருவெடுக்கத் தொடங்கியுள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை சோனல் தினுஷா பெற்றார். அவர் 2 போட்டிகளில் 4 இன்னிங்சில் 420 ரன்கள் எடுத்தார். இதில் 28 பவுண்டரிகள் 8 சிக்ஸர்கள் அடங்கும். எதிர்காலத்தில் இலங்கை அணியின் புதிய நட்சத்திரமாக சோனல் தினுஷா பல போட்டிகளில் மிளிர்வார் என்று ரசிகர்கள் ஆழமாக நம்புகின்றனர்.

Source: Read Full Article