தஞ்சாவூர்: நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்கு சென்ற தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை மீட்கும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் அடங்கிய வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் செயல்பட்டு வரும் சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம், திருக்கயிலாய மானசரோவர் யாத்திரைக்காக தஞ்சாவூர், சென்னை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் நேபாளம் சென்றனர்.

இவர்கள் புதன்கிழமை 3 பேருந்துகளில் நேபாளம்–சீனா எல்லைப் பகுதியில் உள்ள சியாபுருபேசி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத வகையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு பேருந்தில் பயணம் செய்தவர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், மற்ற இரு பேருந்துகளில் சென்றவர்களின் நிலை குறித்து தொடர்ந்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மாயமான 16 பேரின் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களில் களிமேடு மேலத் தெருவைச் சேர்ந்த அம்பிகாபதி மனைவி அன்பழகி (67), ராஜப்பா நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சித்ரா (61), வ.உ.சி. நகர் ஜெ.ஜெ. நகரைச் சேர்ந்த ரெங்கநாதன் மனைவி சிவயோகம் (65), பூக்கார லாயம் ஜெகநாதன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மனைவி இளவரசி (66), மருத்துவக்கல்லூரி அருகே கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த பெருமாள் மனைவி தங்கமதி (49) ஆகியோர் உள்ளனர்.

மேலும், கும்பகோணம் மேற்கு சத்யம் நகரைச் சேர்ந்த ஜி.ராம்குமார் (60), அவரது மனைவி கீதா (56), சுவாமிமலை வடக்கு வீதியைச் சேர்ந்த டி.ராஜ்குமார் (62), அவரது மனைவி ஜெயந்தி (54), செட்டிமண்டபம் வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த ரமேஷ் (68), புது மணி வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெ.திருமலைராஜன் (54), அவரது மனைவி தையல்நாயகி ஆகியோரும் மாயமானவர்களின் பட்டியலில் உள்ளனர்.

கர்ணகொல்லை அக்ரஹாரத்தைச் சேர்ந்த எஸ்.சாய்நாத் (70), அவரது மனைவி ஜெயலெட்சுமி (64), மகள் கேதாரகெளரி (32), கும்பகோணம் சூப்பர் யாத்ரா டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் சையது சாதிக் மகன் சையத் உமர் பாருக் (32) ஆகியோரும் மாயமாகியுள்ளனர்.

24 மணி நேர உதவி எண்கள்

நேபாளத்தில் சிக்கியுள்ளவர்களின் குடும்பத்தினர் தகவல்களைப் பெறுவதற்காக, தமிழக அரசின் அயலகத் தமிழர் நலத்துறை சார்பில் 24 மணி நேரமும் கட்டணமில்லா உதவி எண்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவுக்குள் 1800 309 3793, வெளிநாடுகளில் இருந்து 91 8069009900 என்ற எண்ணில் மிஸ்டு கால் அளிக்கலாம். தொடர்புக்கு 91 806900 9901, புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல கட்டுப்பாட்டு அறைக்கு 92896516712 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.

குடும்பத்தினருக்கு உடனுக்குடன் தகவல்

மாயமான 16 பேரின் குடும்பத்தினரை வருவாய்த் துறை அலுவலர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு, தமிழக அரசு மேற்கொண்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், யாத்திரைக்கு சென்றவர்களின் 16 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் அடங்கிய வாட்ஸ்ஆப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் பகிரப்பட்டு வருகின்றன. குடும்பத்தினரின் கோரிக்கைகள் குறித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி தெரிவித்துள்ளார்.

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் தங்கள் உறவினர்களின் நிலை என்ன என்பது தெரியாமல் குடும்பத்தினர் கவலையடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்த அடுத்தடுத்த தகவல்களை எதிர்பார்த்து வருகின்றனர்.

Source: Read Full Article