காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி ஒருநாள் பயணமாக இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தருகிறார். இந்த நிலையில் இப்பயணம் முழுக்க முழுக்க கட்சி சார்ந்தது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தவெகவுடன் இணைந்த காங்கிரஸ்

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. அக்கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 5 இடங்களில் மட்டுமே வென்றது. இதனிடையே தேர்தலில் தவெக ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்றாலும் பெரும்பான்மை இல்லாமல் தவித்தது. இதனால் திமுக கூட்டணியை முறித்த காங்கிரஸ் கட்சி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை ஆகிய 2 அமைச்சரவையையும் காங்கிரஸ் பெற்றது.

இப்படியான நிலையில் தமிழக முதலமைச்சராக தான் பதவியேற்ற நாளில் மரபுகளை மீறி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை மேடையில் அமர்த்தி ஜோசப் விஜய் அழகு பார்த்தார். இப்படியாக தவெக - காங்கிரஸ் கூட்டணி சென்று வரும் நிலையில் விஜய் முதலமைச்சரான பிறகு முதல்முறையாக ராகுல்காந்தி தமிழ்நாட்டிற்கு ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று வருகை தருகிறார்.

ராகுல்காந்தி பிளான் என்ன?

இன்று காலை 10 மணிக்கு விமானம் மூலம் தமிழ்நாடு வரும் ராகுல் காந்தி மாமல்லபுரம் செல்கிறார். அங்கு நடைபெற்று வரும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கான 10 நாட்கள் பயிற்சி முகாமில் பங்கேற்று அவர்களிடையே உரையாற்றவுள்ளார்.
தொடர்ந்து நீட் வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களின் குடும்பத்தினரை சந்திக்கிறார்.

Also Read: மக்கள் என்ன செய்யணும்ன்னு நீங்க சொல்லாதீங்க - பிரதமர் மோடியை விளாசிய ராகுல்காந்தி!

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலப் பாதை குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். பின்னர் இரவு 7 மணிக்கு மீண்டும் அவர் டெல்லி செல்லவுள்ளார்.

விஜயை சந்திக்காமல் தவிர்ப்பா?

இதனிடையே ராகுல்காந்தி முதலமைச்சர் விஜயை சந்திக்காமல் தவிர்ப்பது திட்டமிட்ட ஒன்று என்ற தகவல் பரவி வருகிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா - தமிழ்நாடு இடையே மேகதாது விவகாரம், காவிரி நீர் பிரச்னை போன்றவை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், இங்குள்ள தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளால் கடுமையான நெருக்கடி கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் ராகுல்காந்தியை வைத்து கர்நாடகாவுக்கு அழுத்தம் கொடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பல அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இப்படியான சூழலில் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்ட் 5ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அதற்குள் முதலமைச்சர் விஜய் இந்த பிரச்னையில் ஏதேனும் நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Source: Read Full Article