தொகுதி மறுவரை - எம்பிக்கள் கூட்டம்

தொகுதி மறுவரை தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக எம்.பிக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக,தேமுதிக, பாமக,மநீம உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளது. அதே நேரம் தவெக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் இந்த கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளாதது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், காவிரித் துரோகத்தை மறைக்கத் தவெக அரசு நடத்தும் திசைதிருப்பல் நாடகமே இந்த எம்.பி.க்கள் கூட்டம்! பாஜகவை எதிர்த்துப் பேசப் பயந்து, கடந்த ஆண்டு திமுக நடத்திய வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தமுறை (SIR) அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தவர் இந்த விஜய்!

எம்பிக்கள் கூட்டம் தேவை என்ன.?

தொகுதி மறுவரையறை ஆபத்தை முதன்முதலில் எதிர்த்து, மாநாடுகள் நடத்தி, நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவைத் தோற்கடித்தவர் நம் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்தான்! இதில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு, தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது என்று ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், இப்போது இந்த எம்.பி.க்கள் கூட்டத்திற்கான தேவை என்ன?

தவெக அரசின் கபட நாடகம்

காவிரி விவகாரத்தில் கர்நாடகக் காங்கிரஸிடம் உரிமையை அடகு வைத்துவிட்டு, டெல்டா விவசாயிகளின் போராட்டத்திலிருந்து தப்பிக்கவே இந்த அவசரத் தொகுதி மறுவரையறை நாடகத்தை அரங்கேற்றுகிறார் இந்த டம்மி முதல்வர்! மேகதாது அணை விவகாரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட வேண்டும்; சட்டமன்றத் தீர்மானத்தை நமது எம்.பி.க்களுடன் சென்று ஒன்றிய ஜல் சக்தி அமைச்சரிடம் நேரில் வழங்கத் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகள் தயாரா? விவசாயிகளின் உரிமையை விற்றுவிட்டு, தவெக அரசு நடத்தும் எந்தக் கபடுநாடகத்திலும் தி.மு.க. பங்கேற்காது. தமிழ்நாட்டின் நலனில் எங்களின் நிலைப்பாட்டில் எள்ளளவும் மாற்றமில்லை என திமுக ஐடி விங் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது.

Source: Read Full Article