கட்சியின் அமைப்பு முறையில் மிகப்பெரிய மாறுதலை செய்யவுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்த நிலையில், கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் கொண்டு வர அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அந்த வகையில் திமுக மாநில செயற்குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் அனைத்து பதவிகளுக்கும் வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் பதவிக்காலமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் பொருட்டு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார்.

செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுகவின் வலிமைக்கு காரணம் கட்சியின் அமைப்பு முறை தான். அதுதான் திமுக தொடங்கி 75 ஆண்டுகளை கடந்தும் வலிமையாக இருக்க காரணம். தேர்தலில் தோல்வி அடைந்துள்ளமோ தவிர நிரந்தரமாக தோல்வியடையவில்லை. நாம் பார்க்காத வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. நம் தோல்விக்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் மிக முக்கியமானவை. எந்த தனி மனிதனின் செயல்பாடுகளில் தவறு என்றாலும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படுவது கட்சி தான்.

தனக்கு இணையாக யாரும் வளரக்கூடாது என நினைத்தால் கட்சியில் அவர் மட்டுமே இருப்பார். போராடிக்கிறது என்ற அரசியலுக்கு வந்தவர்கள் நாம் அல்ல. போராட வந்தவர்கள். முதலில் நமது தவறுகளை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். விளக்கு அடியில் இருக்கும் இருள்போல நம் தவறுகளை நாம் கவனிக்காமல் விட்டு விட்டோம். கட்சியின் எதிர்காலத்தை திட்டமிட நமக்கு கால அவகாசம் கிடைத்திருப்பதாக நினைத்துக் கொள்வோம். கம்பேக் கொடுப்பதில் தான் நாம் ஸ்பெஷலிஸ்ட். அதை நாம் சிறப்பாக கொடுப்போம். படைக்கு இளையோர் வரும்போது மூத்தோர் வரவேற்று வழிநடத்த வேண்டும்.

இளைஞர்கள், பெண்களின் நம்பிக்கையை நாம் பெற வேண்டும். சிலருக்கு நம் கட்சிக்காரர்களைப் பார்த்தால் முகம் மலருவதில்லை. கட்சியை மறுசீரமைப்பு செய்வதன் மூலம் தான் மீண்டும் திமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த மாற்றங்கள் அடுத்த நூறாண்டுக்கு திமுகவை உயிர்ப்புடன் வைத்திருக்க செய்யும். புதுமுகங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பொறுப்பு வழங்கப் போகிறோம்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்களைப் போல நாம் கட்சியை நடத்தலாம் என நினைக்கக்கூடாது. மக்களுக்காக உழைக்காமல் போராடாமல் கொள்கை இல்லாமல் ஆட்சிக்கு வந்துள்ளனர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் ,மக்கள் நலனுக்காக சிறப்பாக உழைக்கும் கட்சி திமுக என சொல்வார்கள். பெயரை மாற்றுவதில் முதலமைச்சர் விஜய் பிஸியாக உள்ளார். சட்டமன்றத்தை சினிமா செட் என நினைத்து பஞ்ச் டயலாக் பேசிக் கொண்டிருக்கிறார் விஜய் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article