Minister Ramesh: கோயில்களில் செல்போன் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கிழக்கு கோபுர நுழைவு வாயில் திறப்பு

கடந்த 3 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலின் கிழக்கு வாசல் கோபுர நுழைவுவாயில் மற்றும் பாதையின், சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததை தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று திறந்து வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகள் காரணமாகவே இந்த பணிகள் தாமதமடைந்துள்ளன. கடந்த கால ஆட்சியில் எதற்காக தாமதம் செய்தார்கள் என்பதை அவர்களை தான் கேட்க வேண்டும்” என பதிலளித்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம் - அமைச்சர் ரமேஷ்

கோயில் நிலங்கள் முறைகேடாக பதிவு செய்யப்படுவது குறித்த கேள்வி எழுப்புகையில், “நிலம் தொடர்பான பிரச்னைகளில் பெரும்பாலானவை ஒரு அறைக்கட்டளையின் கீழ் சொந்தமன நிலங்களாகும். அல்லது அந்த அறக்கட்டளையை நிர்வகிக்க கூடிய நபர்களின் பெயர்களின் மீதுள்ள நிலங்களாகும். அந்த நிலத்தை என்ன நோக்கத்தில் அவர்களின் முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள் என்று பார்த்தால் கோயில்களுக்கு தர்ம காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்காக கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த நோக்கத்தை மறைத்துவிட்டு நீதிமன்ற உத்தரவுகள் மூலமாகவும், நிர்வாக ரீதியிலான சில நடவடிக்கைகள் மூலமாகவும் அறநிலையத்துறையின் கவனத்திற்கு வராமல் இதுபோன்ற பத்திர பதிவுகள் நடைபெறுகினேறன. ஆனால், இவை அனைத்தும் நமது கவனத்திற்கு வந்த உடனே சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கிறோம். நடவடிக்கை எடுக்காமல் இருப்பது தான் தவறு.

திமுகவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா?

கடந்த கால ஆட்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இதேபோன்று ஒரு அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தனிநபர்கள் மீது பத்திரப்பதிவு செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்றது என்ற விவகாரம் நமது கவனத்திற்கு வந்ததுமே, கடந்த 5 வருடங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த அந்த வழக்கில் தற்போது 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியாளர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? கோயிலை காப்பாற்றுகிறோம், கோயிலை நாங்கள் தான் மீட்கிறோம், நாங்கள் தான் கோயிலை காக்க வந்தவர்கள் என பேசியவர்கள் எல்லாம் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் விவகாரத்தில் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? ஏன் கைது செய்யவில்லை? எனவே நடவடிக்கைகள் தான் முக்கியம்” என அமைச்சர் ரமேஷ் பதிலளித்தார்.

இதையும் படியுங்கள்: CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!

கோயில்களில் செல்போன்களுக்கு தடை விவகாரம்

கோயில்களில் செல்போன்களுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து கேட்கையில், “ஏற்கனவே கோயில்களுக்கும் செல்போன்களை அனுமதிக்க கூடாது என நீதிமன்ற ஆணைகள் உள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருப்பதை மீண்டும் அறிவிக்கிறார்கள் என சிலர் கேலி கிண்டல் செய்கின்றனர். முதலில் ஒரு திட்டம் இருந்தால் அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்று பார்க்க வேண்டும். கடந்த கால ஆட்சியில் அதை செயல்படுத்தவே இல்லை. கோயிலுக்குள் செல்வது, கருவறையில் எடுத்த வீடியோக்கள் எல்லாம் வெளியே வருகின்றன. அதற்காக தான் தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. முதலில் முதுநிலை திருக்கோயில்களை கையில் எடுத்துள்ளோம். அங்கு இதற்கேற்ற இடமும், வருமானமும் இருப்பதால், செப்டம்பர் 1ம் தேதி முதல் அங்கு மொபைல் கவுண்டர்களை அமைக்க உத்தரவிட்டு இருக்கிறோம். இறைவனை தரிசிக்கும் இடத்தில் புகைப்படங்கள் எடுப்பது, வீடியோக்கள் எடுப்பது தேவையற்ற ஒன்று” என அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தினார்.

Source: Read Full Article