BJP DMK FCRA Bill: தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு பெறுவதற்காக FCRA மசோதாவை மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

தாமதமாகும் FCRA மசோதா..!

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் அதன் கடைசி வாரத்தை எட்டியுள்ளது. ஆனால், கடந்த வாரம் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட FCRA மசோதா, திங்கட்கிழமை விவாதத்திற்கான நிகழ்ச்சி நிரலில் இடம்பெறவில்லை. இதன் காரணமாக பல்வேறு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ள இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் அரசு உள்நோக்கத்துடன் மெத்தனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற்ற திமுக மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸின் ஆதரவு வேண்டி இருப்பதால், அவர்களை திருப்திபடுத்தும் விதமாக அந்த கட்சிகள் எதிர்க்கும் FCRA மசோதாவை தாமதப்படுத்தும் முடிவினை பாஜக எட்டியுள்ளதாம்.

விவாத அட்டவணையில் இல்லாத FCRA மசோதா..!

ஆகஸ்ட் 13 அன்று நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைய உள்ளது. மீதமுள்ள நான்கு நாட்களில் மசோதாவை நிறைவேற்றுவதற்காக எடுத்துக்கொள்ள வேண்டுமானால், அதன் மீதான விவாதத்திற்கான கால அட்டவணையை அரசு நிர்ணயிக்க வேண்டும். அதன்படி, வரவிருக்கும் நிகழ்ச்சி நிரல் அம்சங்களை உறுதி செய்யும் வகையில் இன்று நடைபெற உள்ள மக்களவையின் அலுவல் ஆலோசனைக் குழுவில் பல்வேறு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என கூறப்படுகிறது. தற்போது வரை திங்கட்கிழமை நிகழ்ச்சி நிரலில் நான்கு மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட திட்டமிடப்பட்டு இருந்தாலும், வெளிநாட்டு பங்களிப்பு (FCRA) திருத்த மசோதா குறித்த எந்த விவரமும் அதில் இல்லை.

சிறுபான்மையினர்கள் கடும் எதிர்ப்பு..!

இந்த மசோதா கடந்த மார்ச் 25 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள், குறிப்பாக கிறிஸ்தவ அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக இதுவரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. வெளிநாட்டு நிதியுதவியைப் பெருமளவில் பெறும் கிறிஸ்தவக் குழுக்கள், சட்ட மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் தங்களின் தொண்டுப் பணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், தங்களின் FCRA உரிமம் திரும்பப் பெறப்பட்டாலோ அல்லது புதுப்பிக்கப்படாவிட்டாலோ அரசாங்கம் தங்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய இது வழிவகுக்கும் என்றும் கவலை தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்: CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?

பாஜகவிற்கான அரசியல் சிக்கல்

இதனிடையே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தேவாலயங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு, மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் அல்லது பரிசீலனைக்காக ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று விடுத்த கோரிக்கைக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஆதரவளித்து இருக்கிறார். இது பாஜகவுக்கு அரசியல் ரீதியாக மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் ஆதரவை நாடும் பாஜக..!

2029 முதல் மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதுடன், தொகுதி மறுவரையறைப் பணிகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக மீண்டும் ஒருமுறை முயற்சி செய்வதற்கு முன்னர், திமுகவின் கவலைகளைத் தணித்து அதனைத் தன் பக்கம் ஈர்க்க அரசு முயன்று வருகிறது. எனவே FCRA மசோதாவைக் கொண்டு வந்து திமுகவிற்கு கடினமான சூழலை நோக்கி தள்ள பாஜக அரசு விரும்பாமல் இருக்கலாம் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ள கட்சியாக அரசாங்கத்தால் கருதப்படும் மற்றொரு கட்சியான தேசியவாத கட்சியை கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சூலேவும். எஃப்.சி.ஆர்.ஏ மசோதாவை எதிர்த்துள்ளார். இதனை கருத்தில் கொண்டே FCRA மசோதா மீதான விவாதம் தாமதமாக்கப்பட்டுள்ளதாம். ஒருவேளை மேற்கூறிய நிகழ்வுகள் உறுதியாகும்பட்சத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளிப்பது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

Source: Read Full Article