திமுகவில் கிளைச்செயலாளர்கள் தொடங்கி மாவட்டச் செயலாளர்கள் வரையிலான பதவிக்கு வயது நிர்ணயம் செய்து அக்கட்சியின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த திமுக தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் அடிப்படை கட்டமைப்பை மாற்றியமைத்து வலுப்படுத்தும் வழிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். அந்த வகையில் ஆகஸ்ட் 22ம் தேதியான இன்று திமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் இயக்கத்தை வலிமையாக்கும். தொண்டர்களை உற்சாகம் அடைய வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தலைமுறையினருக்கு வாய்ப்புகளை வழங்கிட, கிளைக் கழகச் செயலாளருக்கான அதிகபட்ச வயது 45 என்றும், கிளைக் கழகச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்.

புதிய நிர்வாக அமைப்பாக மாநகர பகுதிகளில் கிளைக் கழகம் எனும் பிரிவு தொடங்கப்பட்டு, கிளைச் செயலாளர் எனும் பொறுப்பு உருவாக்கப்படுகிறது. 45 வயதுக்கு மிகாதவர், அப்பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அப்பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே அப்பொறுப்பை வகிக்க முடியும்

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய மாநகரங்களில் இந்த கிளை அமைப்பானது ஏற்படுத்தப்படும். பிற மாநகராட்சிகளில் நிர்வாகச் சூழலுக்கேற்ப இதேபோன்ற கிளை அமைப்புகளை உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்படும்.

சென்னை மாநகராட்சியில் இனி உருவாக்கப்படும் வட்டக் கழகங்கள் சராசரியாக பத்தாயிரம் வாக்குகள் கொண்டதாக இருக்க வேண்டும். மற்ற மாநகரங்களில் சராசரியாக ஐந்தாயிரம் வாக்குகள் கொண்டதாக அமைய வேண்டும். அதுமட்டுமின்றி, மாநகர - நகர - பேரூர் உள்பட்ட கழகங்களுக்கு வட்டக் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 50 என நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், ஒருவர் அப்பொறுப்பை அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வகிக்க முடியும் எனத் தீர்மானிக்கப்படுகிறது.

பேரூர்க் கழகங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் பேரூர்க் கழகச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என நிர்ணயம்

சென்னை மாநகராட்சியில் இனி அமையும் பகுதிக் கழகங்கள் 40 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டதாகவும், மற்ற மாநகரங்களுக்குச் சராசரியாக 30 ஆயிரம் வாக்காளர்கள் கொண்ட பகுதி கழகங்களாகவும் அமைய வேண்டும். அப்படி உருவாக்கப்படும் பகுதிக் கழகங்களுக்கான செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களின் அதிகபட்ச வயது 60 என்றும், அவர்கள் அதிகபட்சமாக இரு முறை அப்பொறுப்பில் பணியாற்ற முடியும்

சராசரியாக 40 ஆயிரம் வாக்காளர்களை உள்ளடக்கிய ஒரு நகரக் கழகம் உருவாக்கப்பட வேண்டும். நகரக் கழகங்களின் அமைப்பை வலுப்படுத்தும் வகையில், நகரச் செயலாளரின் அதிகபட்ச வயது 60 என்று நிர்ணயிக்கப்படுவதுடன், நகரச் செயலாளராக ஒருவர் இரு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும்

30 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றியக் கழகம் என்ற அடிப்படையில் ஒன்றிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். எந்தச் சூழலிலும் ஒரு ஊராட்சி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வெவ்வேறு கழக ஒன்றியங்களுடன் இணைக்கப்படக் கூடாது.

தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்கள், அதனை 110 ஆக அதிகமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டக் கழகங்கள் அதிகரிக்கின்ற காரணத்தால் மாநகரச் செயலாளர்கள் எனும் பொறுப்பின் தேவை எழவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலினின் இந்த முடிவால் பெரும்பாலான சீனியர் நிர்வாகிகள் கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Source: Read Full Article